இனி நடிகைகளிடம் இந்த கேள்வியையும் கேளுங்க… – ஊர்வசி

ஊர்வசி கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்' வருகிற 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஊர்வசியுடன் பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஊர்வசி பேசியதாவது: சின்ன முதலீட்டில் தயாராகும் படங்களுக்கும், பெரிய முதலீட்டில் தயாராகும் படங்களுக்கும் உழைப்பு ஒரே அளவுதான். இருந்தாலும் சின்ன பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு விளம்பரம் அதிகம் தேவைப்படுகிறது. ஒரு படத்திற்கு பலம் அதன் தயாரிப்பாளர்தான்.

பொதுவாக பத்திரிக்கையாளர்கள் எங்களைப் போன்ற நடிகைகளிடம் பிடித்த நடிகர்? பிடித்த நடிகை? பிடித்த கதாபாத்திரம்? பிடித்த இயக்குநர்? என கேள்விகளை கேட்கிறார்கள். இனி பிடித்த தயாரிப்பாளர் யார்? என்றும் கேளுங்கள். ஏனென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ரொம்ப பிடிக்கும். வேறு சில தயாரிப்பாளர்களை பற்றி புகார் அளிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

கொரோனா காலகட்டத்தில் வீட்டில் வேலை இல்லாமல் உட்கார்ந்திருந்தபோது, குறும்படங்கள் இணைய தொடர்களில் நடித்து உற்சாகமாக இருந்தேன். அப்போது இயக்குநர் லலிதா சுபாஷ் சுப்பிரமணியன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நான் நடித்த இணைய தொடர் குறித்து பாராட்டி பேசினார். வழக்கம்போல் அவருடன் தன்னம்பிக்கை ஊட்டும் விசயங்களை பேசினேன். அடுத்த நாள் மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஒரு சிக்கலான அம்மா கதாபாத்திரம் இருக்கிறது. அதனை நீங்கள் தான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கதையை முழுவதுமாக விவரிக்க இயலாது. ஒரு வரியில் சொல்கிறேன் என்றார். பிறகு அதனை குறுஞ்செய்தியாக அனுப்பினார். படித்தவுடன் பிடித்தது.

மூடநம்பிக்கை கொண்ட அம்மா கதாபாத்திரம். அப்பா, அம்மா, தாய், தங்கை என பல உறவுகளின் மீது கட்டாயமாக அன்பு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதற்கென எழுதப்படாத சட்டங்களும் நிறைய உண்டு. ஆனால் நட்பு அப்படியல்ல. நட்புக்கு எந்த மொழியும் இல்லை. எந்த ஜாதியும் இல்லை. எந்த மதமும் இல்லை. எந்த நாட்டு எல்லையும் இல்லை. அத்தகைய விலை மதிக்க இயலாத உயர்ந்த நட்பின் முக்கியத்துவதை இந்த படம் பேசுகிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.