மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் தமிழ்நாடு வந்து சென்றார் அல்லவா? அப்போது நடிகர் விஷாலை அவருடன் சந்திக்க வைக்க முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் விஷால் நழுவிவிட்டதாகவும் நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து விஷாலுக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் சிலரிடம் பேசினோம்.
“பா.ஜ.க நிகழ்ச்சிகள்ல கலந்துக்கவே தமிழ்நாட்டுக்கு வந்தார் அமித் ஷா. ஆனாலும் விரைவில் பா.ஜ.க சார்பில் கலை, இலக்கியம் தொடர்பா சில நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டிருக்கிறதா சொல்றாங்க. அந்த நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கலந்து கொண்டால், அது அடுத்த வருடம் நடக்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு உதவும்னு நினைக்குறாங்க போல. அதனால கோலிவுட்ல இருந்து பல பேரை அதுல கலந்துக்க வைக்க முடியுமான்னு யோசிக்கிறாங்க. குறிப்பா, பா.ஜ.க-வில உறுப்பினரா இல்லாதவங்களைக் கூப்பிட்டா நல்லா இருக்கும்னு டெல்லி வட்டாரத்துல நினச்சாங்க. அந்த வகையிலதான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சந்திப்பெல்லாம் நடந்திருக்குனு சொல்றாங்க.
விஷாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் அந்தக் காரணத்துலதான்னு நினைக்கிறோம். அழைப்பு வந்தது நிஜம். ஆனா ஏன்னு தெரியலை, விஷால் உள்துறை அமைச்சரைச் சந்திக்கச் செல்லவில்லை” என்கிறார்கள் இவர்கள்.
“‘கலை நிகழ்ச்சி தொடர்பான சந்திப்பு’ன்னு சொல்றதெல்லாம் சும்மா. மத்தவங்களை எதுக்குக் கூப்பிட்டாங்கனு தெரியலை. ஆனா விஷாலைக் கூப்பிட்டது முழுக்க முழுக்க கட்சியில இணைக்கத்தான். சில வருடங்களாகவே இந்த முயற்சி நடந்திட்டுதான் இருக்கு. நடிகர் சங்கத் தேர்தல்ல ஜெயிச்சது, சினிமா தயாரிப்பாளர் சங்கத்துல அவர் ஜெயிச்சது, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்தது போன்ற விஷாலின் நடவடிக்கைகளை ஆரம்பத்துல இருந்தே பா.ஜ.க., கவனிச்சிட்டுதான் வந்துட்டிருக்கு. அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்குன்னு தெரிஞ்ச நாள்ல இருந்தே அவருக்கு கேட் போட முயற்சி எடுத்துட்டு வர்றதன் ஒரு தொடர்ச்சிதான் இப்ப அமித்ஷாவுடன் சந்திக்க வைக்க நடந்த முயற்சி.
அதுக்காக பா.ஜ.க சார்பா சில விஷயங்களைச் செய்து தரக்கூட உறுதி தந்ததாகவும் சொல்றாங்க. ஆனா விஷால் இந்த விஷயத்துல பிடிகொடுக்காமத்தான் இருக்கார்.
அமித் ஷா சென்னை வந்த அந்த நேரத்துல, ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படப்பிடிப்பு இருந்ததால, அதைக் காரணம் காட்டி சாமர்த்தியமா அவர் தவிர்த்திட்டார்” என்கிறார், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பிலிருந்தபோது அவருடன் பயணித்த ஒரு சினிமா மக்கள் தொடர்பாளர்.
“விஷாலை இழுத்தால், அவரை வைத்தே அவருடைய நண்பரான உதயநிதியின் சினிமாத் தொடர்புகள் குறித்தும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பிசினஸ் குறித்தும் பெரியளவில் எதையாவது பேசுபொருளாக்கலாம்” என்பதே பா.ஜ.க.வின் பிளானாக இருக்கலாம் என்கிறார்கள்.
மதுரையில் எப்போது ’எய்ம்ஸ்’ செங்கல்லைத் தூக்கிக் காட்டி ஓட்டு கேட்டாரோ, அப்போது முதலே உதயநிதி மீது டெல்லிக்குச் சற்று கூடுதல் எரிச்சல்தானாம்.
பா.ஜ.க.வின் இந்த உள் விவரங்கள் தெரிந்தே, ‘நமக்கெதற்கு இந்த வம்பு’ என விஷால் விலகிச் செல்வதாகவும் சொல்கிறார்கள்.
எப்படியும் விஷால் அமித் ஷாவைச் சந்திக்க வந்துவிடுவார் எனக் கடைசி வரை நம்பிய பா.ஜ.க-வினருக்குச் சந்திப்பு நடக்காததில் பெருத்த ஏமாற்றமாம். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யலாமென நினைக்கிறார்களாம், அவர்கள்.
விஷால் தப்புவாரா, இல்லை தூண்டிலில் சிக்குவாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.