உள்நாட்டில் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதே, முட்டை விலை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முட்டை தட்டுப்பாட்டை தற்காலிகமாக போக்க ஒரு தொகையை இறக்குமதி செய்து சந்தையில் வழங்க முடியும், இது போட்டித்தன்மையை உருவாக்கும், ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை முழுமையாக கட்டுப்பாட்டு விலையில் வைத்திருப்பது கடினம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தம்மால் கொள்வனவு செய்ய முடியாத விலை இருக்கும் போது நுகர்வோர் அந்த பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய அமைச்சர், நுகர்வோருக்கு அதிகாரம் உள்ளது, அதாவது சந்தையில் அதிக ஆதிக்கத்தை செலுத்தும் திறன் அவர்களுக்கு உள்ளது என்பதை நினைவுபடுத்தினார்.
இந்த நிலைமைக்கு கேள்விதாரர் மற்றும் விநியோகஸ்தர் ஆகிய தரப்பினர் தலையிட வேண்டும். இதற்காக உணவு பாதுகாப்பு குறித்து தனி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து விசேட கவனம் செலு;துவதற்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் நினைவு கூர்ந்தார்.