பாட்னா,
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே இந்த கூட்டணியில் இந்துஸ்தானி அவம் மோச்சா என்ற கட்சியும் இடம்பெற்றுள்ளது. இக்கட்சி தலைவராக சந்தோஷ்குமார் சுமன் உள்ளார். நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சி என்பதால் சந்தோஷ்குமார் சுமனிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்துறை மந்திரியாக சுமன் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, சுமனின் தந்தை ஜிதன் ராம் மன்ஜ்ஹி. இவர் பீகார் முன்னாள் முதல்-மந்திரியாவார். இந்த சூழ்நிலையில் சந்தோஷ்குமார் சுமனின் இந்துஸ்தானி அவம் மோச்சா கட்சியை தங்கள் கட்சியுடன் இணைக்க நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நிதிஷ் குமார் மந்திரி சபையில் இருந்து சந்தோஷ்குமார் சுமன் இன்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரிடம் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த சந்தோஷ்குமார், எங்கள் கட்சியின் இருப்பே ஆபத்தில் உள்ளது, எங்கள் கட்சியை பாதுகாக்கவே என் பதவியை ராஜினாமா செய்தேன்’ என்றார்.