ஓயாமல் சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டிருந்த தாயை கொலை செய்த இளம் பெண், தாயின் சடலத்தை டிராவல் பேக்கில் அடைத்து போலீஸ் நிலையம் தூக்கிச்சென்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
பெங்களூரு மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் பெண் ஒருவர் டிராவல் பேக்குடன் வந்தார். காவல் நிலையத்தில் இருந்த போலீசாரோ, ஏதோ புகார் அளிக்க தான் அந்தப் பெண் வந்திருக்கிறார் என நினைத்து என்ன பிரச்சனை என அப்ப என்னிடம் கேட்டபோது அந்தப் பெண் பதில் ஏதும் பேசாமல் தான் கையில் வைத்திருந்த டிராவல் பேக்கை மெல்ல திறந்து போலீசாருக்கு காட்டினார்.
டிராவல் பேக்கிற்குள் எட்டிப்பார்த்த போலீசார் அதிர்ந்து போனார்கள். உள்ளே 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சடலமும் அதன் உள்ளே, ஒரு ஆணின் புகைப்படமும் இருந்தது.
அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பிலேகஹல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் செலிமா சென் என்பதும், டிராவல் பேக்கில் இருந்தது அவரது தாய் சடலம் என்பதும் தெரியவந்தது. செலிமா சென் தனது 70 வயது தாய் மற்றும் அத்தையுடன் வசித்து வந்த நிலையில் , செலிமா சென்னின் தாய்க்கும் , அவரது அத்தைக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகவும், இதன் காரணமாக தனது தாய் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி தன்னை தொடர்ந்து சத்தம் போட்டு மிரட்டி வந்ததால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறி வந்ததாக செலிமா சென் போலீசாரிடம் தெரிவித்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல தாய்க்கும் அத்தைக்கும் இடையே சண்டை வந்ததால்,தன்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் , 20 தூக்க மாத்திரைகளை தாய்க்கு கொடுத்து அவரை தூங்க வைத்து, சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த செலிமா சென், கொல்லப்பட்ட தாயின் சடலத்தை டிராவல் பேக்கில் வைத்து, மறைந்த தன் அப்பாவிடம் தாயின் ஆத்மா செல்ல வேண்டும் என்பதற்காக தந்தையின் புகைப்படத்தையும் சடலத்துடன் டிராவல் பேக்கில் வைத்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததாக போலீசில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், செலிமா சென்னிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகளே கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த கொடூர சம்பவம் பெங்களூரு நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.