'கர்ணன்' ஹிந்திப் படத்தில் சூர்யா ?
ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை இந்தியத் திரையுலகினர் திரைப்படமாக எடுப்பதில் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு சரித்திரப் படங்களின் மீதான ஆர்வம் இந்திய இயக்குனர்களுக்கு அதிகம் வந்துவிட்டது. மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' நாவலை இரண்டு பாகங்களாகப் படமாக்கினார்.
அடுத்து பிரபாஸ், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிக்க ராமாயணத்தைத் தழுவி 'ஆதிபுருஷ்' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஜுன் 16ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. அடுத்து ஹிந்தியில் ரன்பீர் கபூர், யஷ், ஆலியா பட் நடிக்க ராமாணயத்தைத் தழுவி 'ராமாயண்' படம் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய கனவுப்படமாக 'மகாபாரதம்' இருக்கும் என்று பல பேட்டிகளில் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மகாபாரதக் காவியத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமான கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஹிந்தியில் 'கர்ணன்' படம் உருவாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 'ரங்தே பசந்தி, டெல்லி 6, தூபான்' படங்களை இயக்கிய ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இப்படத்தை இயக்க உள்ளார். இது குறித்து ராகேஷ், சூர்யா இடையே பேச்சு வார்த்தை நடந்து வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிந்திப் படங்களில் நடிப்பதற்காகத்தான் சென்னையை விட்டு சூர்யா மும்பை போய் செட்டிலானார் என்றும் சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் 'கர்ணன்' ஹிந்திப் படம் மூலம் சூர்யா அங்கு அறிமுகமாகலாம்.
பிரபாஸ், யஷ் ஆகியோர் ஹிந்தியிலும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பல தென்னிந்திய நடிகர்களுக்கு நேரடி ஹிந்திப் படங்களில் நடிக்க பேரார்வம் ஏற்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர் ஆகியோரும் விரைவில் ஹிந்திப் படங்களில் அறிமுகமாக உள்ளார்கள். அதற்கான பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஏற்கெனவே ஹிந்தியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு “சூர்யபுத்ர மஹாவீர் கர்ணா' என்ற பான் இந்தியப் படம் அறிவிக்கப்பட்டு முன்னோட்ட லோகோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்கள். 'என்னு நின்டே மெய்தீன்' என்ற மலையாளப் படத்தின் இயக்குனரான ஆர்எஸ் விமல் அப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் நடிகர் விக்ரம், கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. 'பொன்னியின் செல்வன்' பட வாய்ப்பு வந்ததால் பின்னர் அப்படத்திலிருந்து விக்ரம் விலகிவிட்டதாகச் சொன்னார்கள். அப்படம் அப்படியே கிடப்பில் உள்ளது.
'ராமாயணம், மகாபாரதம்' ஆகியவற்றைத் தழுவி எடுக்க உள்ளோம் என மேலும் சில படங்களின் அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன. சில படங்கள் அறிவிப்புடன் நிற்கிறது. எந்தப் படம் முழுமையாக எடுக்கப்பட்டு வெளியாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.