கிண்டி மருத்துவமனை திறப்பு: குடியரசு தலைவர் வருகை தள்ளிப் போவது ஏன்? ஸ்டாலின் எடுக்கும் அதிரடி முடிவு!

திமுக ஆட்சியமைத்து 2021இல் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற சமயத்திலேயே தென் சென்னையில் மக்கள் பயன்பெறும் வகையில் கிண்டியில் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை என பல மருத்துவமனைகள் வட சென்னையை மையமாக வைத்தே அமைந்துள்ள நிலையில் தென் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனையை அமைக்கும் முடிவை எடுத்தது திமுக அரசு.

கொரோனா தொற்றால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்த நிலையில் திமுக அரசின் அறிவிப்பு வரவேற்பை பெற்றது. கிண்டி கிங்க்ஸ் மருத்துவ வளாகத்தில் இடம் பார்க்கப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. 240 கோடி ரூபாய் மதிப்பில் 1000 படுக்கை வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது கிண்டி பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை.

இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று அழைத்தார். குடியரசுத் தலைவர் ஜூன் 5ஆம் தேதி நேரம் கொடுத்தார். அன்றைய தினம் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாவிலும் கலந்துகொள்வதாக கூறினார்.

இதற்கிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதால் மருத்துவமனை திறப்பு விழா தள்ளிப்போனது. இதனால் ஜூன் 20ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார் என்று கூறப்பட்டது. ஆனாலும் இன்னும் தேதி உறுதியாகாத நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினே ஜூன் 15ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

குடியரசுத் தலைவர் வருகை தள்ளிப் போவதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்குமா என்று டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம். புதிய நாடாளுமன்றம் திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்தன. நாடு முழுவதும் அந்த நிகழ்வு பாஜகவுக்கு பெரியளவில் விமர்சனத்தை பெற்றுத்தந்தது.

அப்படியிருக்க குடியரசுத் தலைவரை அழைத்து வந்து தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறக்க வைத்தால் அது தேசிய அளவில் கவனம் பெறும் நிகழ்வாக மாறும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி ஆண்டுகள் சில கடந்தாலும் எந்த நடவடிக்கையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. அப்படியிருக்க மாநில அரசு அறிவித்த மாத்திரத்தில் மருத்துவமனையை கட்டி திறப்பு விழாவுக்கு தயாராகிவிட்டதும் அரசியல் ரீதியாக பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இந்த புள்ளிகளை எல்லாம் இணைத்துப் பார்த்தால் குடியரசுத் தலைவர் வருகை தள்ளிப் போவதற்கான காரணம் தெரிய வரலாம் என்று பொடி வைத்து பேசுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.