சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
பல பள்ளிகளிலும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் நுழைவுவாயிலில் நின்று, பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளான நேற்றே அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள், நோட்டு, சீருடை, புத்தகப்பை, காலணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பூங்கொத்து, சாக்லேட் கொடுத்து மாணவிகளை வரவேற்றார். வருகைப் பதிவு உள்ளிட்ட விவரங்களை தலைமை ஆசிரியையிடம் கேட்டறிந்தார். பின்னர் மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப்பை உள்ளிட்டவற்றை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய அவர், ‘‘பள்ளிக்கு வந்துள்ள மாணவ செல்வங்களுக்கு என் வாழ்த்துகள். மாணவர்களின் நலனே அரசுக்கு முக்கியம். அனைவரும் நன்கு படித்து பெருமை சேர்க்க வேண்டும்’’ என்று வாழ்த்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து 8,340 நடுநிலை, 3,547 உயர்நிலை, 4,221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 46.22 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 1.31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிட்டுள்ளோம்.
பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து பயண அட்டையை எப்போது வழங்கலாம் என்று போக்குவரத்து துறையுடன் ஆலோசிக்கப்படும். மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலே அரசு பேருந்தில் இலவசமாக பயணத்துக்கு அனுமதிக்க போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. நடப்பு கல்வி ஆண்டில் அதிக அளவில் தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் அதிக தேர்ச்சிக்கு இலக்கு நிர்ணயித்து பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வருங்காலங்களில், பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போரை மீண்டும் ஒரு தேர்வு இல்லாமல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடற்கல்விக்கு தனி பாடம் கொண்டு வருவது குறித்துவரும் 15-ம் தேதி நடக்க உள்ளஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். மாநில கல்விக் கொள்கை உருவாக்கும் பணி நடந்து வருகிறது என்றார்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு நாளை (ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.