செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு.. புறவாசல் வழியே அச்சுறுத்த பார்க்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தன்வசம் இருக்கும் விசாரணை அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி இதுமட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இந்நிலையில்தான், அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். “சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” எந்த சோதனையாக இருந்தாலும் ஒத்துழைப்பு தருவேன்” என செந்தில் பாலாஜி பேட்டியும் அளித்துள்ளார். அதன்படி, முழு ஒத்துழைப்பையும் அவர் அளித்து வருகிறார்.

இந்த சூழலில், தலைமைச் செயலகத்தில் அவரது அறைக்கு சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்துவோம் என்று காட்டவோ அல்லது அதனை சுட்டிக்காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனவும் தெரியவில்லை. இவை எல்லாம் விசாரணை அமைப்பானது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதையே எடுத்துக் காட்டுகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற நிலையில், உடனடியாக இதுபோன்ற காரியங்கள் நடக்கிறது என்றால் என்ன பொருள்? இதுபோன்ற அமலாக்கத்துறை தாக்குதல்களை தலைமைச் செயலகத்தின் மீதே தொடுப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கே களங்கம் ஏற்படுத்துவது ஆகும். ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்கு மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதான் அரசியல் சட்ட மாண்பை காப்பதா?

கடந்த அதிமுக ஆட்சியில் 2016-ம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு – கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்த தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.

“இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது” என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத்தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பா.ஜ.க. உருவாக்கி வருகிறது.

பாஜகவின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, இதுபோன்ற புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் அரசியல் செல்லுபடியாகாது என்பதை பாஜக தலைமை உணர வேண்டும். அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.