சென்னை அணியின் முக்கிய இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு ஜூன் 3-ம் தேதி மிகப் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
அவரின் நீண்டநாள் காதலியான உத்கர்ஷா பவார் என்ற கிரிக்கெட் வீராங்கனையை ருத்துராஜ் கரம் பிடித்திருக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள தனியார் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் சிவம் துபே உள்ளிட்ட சிஎஸ்கே அணி வீரர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களது திருமணம் குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் தற்போது, ருத்துராஜ் தமிழ்நாட்டின் கலாசார உடையுடன் எடுத்துக்கொண்ட தனது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மனைவி உத்கர்ஷா குறித்தும் பேசியிருக்கிறார். அவர் பகிர்ந்த அந்தப் பதிவில், “உத்கர்ஷா என்னுடைய வாழ்வின் ஒரு பகுதி. என்னுடைய பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தே என்னோடு இருக்கும் உத்கர்ஷாவுக்கு என்னுடைய வாழ்வின் முக்கிய அம்சங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.
சென்னை மக்கள் மற்றும் சி.எஸ்.கே அணி எனக்கு அளித்த வாழ்க்கைக்காக, மகாராஷ்டிரா முறைப்படி நடக்க வேண்டிய எங்கள் திருமண நிச்சயதார்த்தத்தைத் தென்னிந்திய பாரம்பரியப்படி நடத்த வேண்டும் என என் மனைவி உத்கர்ஷாதான் முடிவு செய்தார்” என்று அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
தமிழர் பாரம்பரிய உடையில் கலக்கிய அந்த இளம் தம்பதியினருக்குப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.