தூத்துக்குடி: “ஜெயலலிதா சிறைக்கு சென்றது ஏன்? ஒருவர் செய்த எல்லா தீமைகளும், இறந்துவிட்டதால் புனிதமாகிவிடாது” என்று அண்ணாமலைக்கு எதிராக அதிமுக நிறைவேற்றிய தீர்மானம் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக சார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அண்ணாமலை தவறாக என்ன பேசினார்?
ஜெயலலிதா எதற்காக சிறைக்கு சென்றார்? சசிகலாவை எதற்காக சிறையில் வைத்தனர்? ஆட்சியில் இல்லாதவர் மீதே வழக்குத் தொடுத்து 4 ஆண்டுகள் சிறையில் வைத்தீர்களே? ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? எனவே, அதுகுறித்து பேசிக் கொண்டே இருக்க வேண்டியது இல்லை” என்றார்.
அப்போது அவரிடம் அண்ணாமலை கூறிய கருத்து சரி என்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், எதற்காக ஜெயலலிதா சிறைக்கு சென்றார் என்று கேள்வி எழுப்பினார். பின்னர், “ஒருவர் செய்த எல்லா தீமைகளும் வந்து, இறந்துவிட்டதால் புனிதமாகிவிடாது. எனவே அதையே பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை” என்று பதிலளித்தார்.
முன்னதாக, “கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். | விரிவாக வாசிக்க > அதிமுக Vs பாஜக | “அரசியல் வரலாற்றில் நடந்ததையே கூறினேன்” – ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விளக்கம்