கடந்த மாமதம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய வேட்டையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள், காய்ச்சியவர்கள் என 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டன. கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து கள்ளச்சாராயம் மட்டுமின்றி மது இல்லாம தமிழகத்தை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே இரும்பு பட்டறை ஒன்றில் இரண்டு பேர் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்தனர். அவர்களுக்கு அருகே காலி மதுப்பாட்டில் ஒன்றும், மூடி திறக்காத மதுபாட்டில் ஒன்றும் இருந்துள்ளது.
இதையடுத்து டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்ததே அவர்களின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது என்றும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவுதான் மீண்டும் இரு உயிர்கள் பறி போகக் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துவதாகவும் அண்ணாமலை தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.