மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த இணைப்பின் காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 14 மக்களவைத் தொகுதிகளில் வலுவாக இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் – வைத்திலிங்கம் கூட்டணி!தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திமுக அரசை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியில் முக்கிய தளபதியாக செயல்பட்டு வரும் ஆர்.வைத்திலிங்கம் கலந்து கொண்டார்.
எடப்பாடிக்கு பதில் சொல்லும் கூட்டம்!திமுக அரசுக்கு எதிரான பொதுக்கூட்டம் என்றாலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகவே பேச்சுக்கள் அமைந்தன. கடந்த மாதம் இதே ஒரத்தநாட்டில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்தி வைத்திலிங்கத்தை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அமமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பதில் சொல்லும் மேடையாக வைத்திலிங்கமும், டிடிவி தினகரனும் மாற்றினர்.
அதிமுக – அமமுக கூட்டணி!வைத்திலிங்கம் பேசும் போது, “சுயநலக்காரராக உள்ள எடப்பாடி பழனிசாமியால் தான் 2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தது. எங்களை எதிரிகள் நெஞ்சில் குத்தினால் தாங்கிக் கொள்ளலாம். துரோகிகள் அதிமுக ஆளுங்கட்சியாக வருவதைத் தடுத்துவிட்டார்கள். அதை நிறைவேற்றத்தான் அதிமுகவும் அமமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயல்பட இருக்கிறது. இங்கு ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் சத்தம் தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவர ஓபிஎஸ் – டிடிவி அடித்தளமிட்டுள்ளார்கள்.
யாருக்கு என்ன சின்னம்?எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை இல்லை என்றால் ஒரு தொகுதியில் கூட எடப்பாடி பழனிசாமி 1000 வாக்குகளைக் கூட வாங்க முடியாது. ஒருவர் பேசினாராம், அவர்கள் என்ன கத்தரிக்கோல் சின்னத்திலா நிற்கப்போகிறார்கள் என்று. நாங்கள் கத்தரிக்கோல் சின்னத்தில் நிற்கத் தயார். நீங்கள் பிளேடு சின்னத்தில் நிற்கத் தயாரா? எங்களை விட நீங்கள் ஒரு வாக்கு அதிகம் வாங்கிவிட்டால் நாங்கள் அதிமுகவில் இருந்தே விலகிவிடுகிறோம்” என்றார்.
திமுகவை வீழ்த்த பிளான்அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசும் போது, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப் பதவியை கபளீகரம் செய்து விட்டனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவோடு அதிமுகவிற்கு சமாதி கட்டி விட்டனர். அமமுக – ஓபிஎஸ் கூட்டணி என்பது இயற்கையாக அமைந்த கூட்டணி. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றுபட்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று அமைந்த கூட்டணி.
14 தொகுதிகள் உறுதி!
இந்த கூட்டணியால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 14 மக்களவைத் தொகுதிகளில் மிகவும் வலுவாகி விட்டோம். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க உத்வேகம் பெற்றுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் இரு இயக்கங்களின் தொண்டர்கள் இணைந்துள்ளனர். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒருகுடையின் கீழ் ஒருங்கிணையும் போது திமுக ஆட்சியை அகற்ற முடியும். ஒருசில சுயநலவாதிகளை அப்புறப்படுத்தி விட்டு, ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்” என்று கூறினார்.