கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தொடங்கி வைப்பதாக கூறி பேருந்தை ஓட்டிய பெண் எம்.எல்.ஏ தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டதால் பேருந்து மோதி பல வாகனங்கள் சேதம் அடைந்தது.
பேருந்தை ஓட்டுவதாக கூறி ரிவர்ஸ் கியர் போட்டு சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை தட்டித்தூக்கிய பெண் எம்.எல்.ஏ ரூபா கலா இவர் தான்
கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத்தை மாநில முதல் அமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்த நிலையில் கோலார் தங்க வயலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபா கலா இந்த திட்டத்தை தொடங்கி வைக்க தனது படைபரிவாரங்களுடன் பேருந்தில் ஏறினார்
உடன் வந்தவர்கள் எல்லாம் பேருந்தை இயக்கி தொடங்கி வைக்குமாறு உசுப்பேற்ற ஏதோ சைக்கிள் ஓட்டுவது போல ஓட்டுனர் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு திரு திருவென விழித்தார்
அருகில் நின்ற காட்சி பிரமுகரை கீழே இறங்கச்சொன்ன ரூபாகலா , ஓட்டுனரை வரச்சொன்னார்,
ஓட்டுனர் ஸ்டியரிங்கின் ஒருபக்கத்தை பிடித்துக் கொண்டு நிற்க, எம்.எல்.ஏ தனது திறமையை காட்ட ஆரம்பித்தார்
முன்பக்கம் கியர் போட்டு வண்டியை மெல்ல நகர்த்த அருகில் நின்ற ஓட்டுனர் ஸ்டியரிங்கை பிடித்து வளைத்துக் கொண்டிருந்தார்
பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே சென்ற நிலையில் கியர் மாற்றிய ரூபாகாலா தவறுதலாக ரிவர்ஸ் கியரை தட்டிவிட அடுத்த நொடி பின்பக்கம் சென்ற அரசு பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை இடித்து தள்ளியது.
பேருந்துக்கு வெளியே நின்றவர்கள் கூச்சலிட்ட நிலையில் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார். இந்த சம்பவத்தில் அதிர்ஷடவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை, விட்டால் போதும் என்று எம்.எல்.ஏ ரூபாகலா அங்கிருந்து இறங்கிச்சென்றார்.
கனரக வாகன ஓட்டுனர் உரிமம் இன்றி எம்.எல்.ஏ ரூபாகலா பேருந்தை இயக்கியது எப்படி ? என்று கேள்வி எழுப்பி உள்ள எதிர்கட்சிகள் விபத்தை ஏற்படுத்திய அவர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடி பொடிகளோடு வந்தோமா… திட்டத்தை தொடங்கி வச்சமா.. போட்டோவுக்கு போஸ் கொடுத்தோமான்னு போயிருந்தா இப்படி ஒரு சம்பவம் நடத்திருக்காது என்கின்றனர் உள்ளூர் காங்கிரசார்.