விழுப்புரம் மாவட்டத்தில், முக்கிய நகராட்சியாக இருந்து வருகிறது திண்டிவனம். மொத்தம் 33 வார்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், 23 இடங்களைக் கைப்பற்றியது தி.மு.க. அதன்படி, நகராட்சி சேர்மன் பதவியையும் தன்வசப்படுத்தியது. இம்முறை பெண் (பொது) வேட்பாளருக்கு சேர்மன் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளரும் 9-வது வார்டு கவுன்சிலருமான நிர்மலா என்பவர் சேர்மனாக அறிவிக்கப்பட்டார். 22-வது வார்டு வி.சி.க கவுன்சிலர் ராஜலட்சுமி, துணை சேர்மன் ஆனார்.
ஆனால், “8-வது வார்டில் வெற்றி பெற்ற நிர்மலாவின் கணவரே நகராட்சி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்” என்று நகராட்சிக்குள் புகைச்சல்கள் நீடித்து வந்தன. இந்த சர்ச்சை கருத்துகளுக்கெல்லாம் வலுசேர்க்கும் வகையில், நகரமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சேர்மனுடைய கணவரே (ரவிச்சந்திரன்) பதிலளிக்கும் வகையிலான வீடியோ காட்சிகளும் வெளியாகின.
இது ஒருபுறமிருக்க, சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற திண்டிவனம் நகரமன்றக் கூட்டத்தின்போது தி.மு.க கூட்டணிக்குள்ளான புகைச்சல் வெடித்தது. “நான் பட்டியல் சமூகம் என்பதால், எனக்கு சேர்மன் அருகே இருக்கை ஒதுக்கவில்லை. ‘அப்படி ஒதுக்கினால், 10 கவுன்சிலர்கள் வெளியேறிடுவோம்’ எனச் சொல்வதாக சேர்மனுடைய கணவர் (ரவிச்சந்திரன்) சொல்கிறார்” என்று நகரமன்றக் கூட்டத்திலேயே வெளிப்படையாகவே தனது ஆதங்கத்தை போட்டுடைத்திருந்தார் துணை சேர்மன் ராஜலட்சுமி. இந்தச் சம்பவம், நகராட்சி நிர்வாகத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இப்படியான சூழலில்தான்… ரவிச்சந்திரனுக்குப் பின்புலத்தில், சந்திரன் என்ற தி.மு.க கவுன்சிலர் இருப்பதாகவும், அவர் அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வானுக்கு மிகவும் இணக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், திண்டிவனம் தி.மு.க கவுன்சிலர்கள் சிலர்… தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி, நகராட்சி சேர்மனுக்கு எதிராக ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம்’ கொண்டுவரும் முடிவில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்த தகவல்கள், சமூக வலைதளங்களிலும் பரவியது. எனவே, இது குறித்து தி.மு.க கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “நகராட்சி நிர்வாகத்தில்… அமைச்சர் மருமகன், சந்திரனின் ஆதிக்கத்தை நீக்க வேண்டும். இல்லை, நகராட்சி சேர்மனுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து வேறொருவரை சேர்மனாக அமர்த்த வேண்டும் என்ற முயற்சிகளில் தி.மு.க நிர்வாகிகளே ஈடுபட தொடங்கிவிட்டனர்.
அதற்காக எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், தி.மு.க அதிருப்தி கவுன்சிலர்கள் என 20 பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 25-வது வார்டு பெண் கவுன்சிலர் ரேகாவை சேர்மனாக்குவற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. அதற்காக அவருடைய கணவர் நந்தாவும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றார். இன்னும் 4 கவுன்சிலர்களே தேவையென்பதுபோல பேசிக்கொள்கிறார்கள். நேற்று இரவுகூட, காந்தி சிலை அருகே கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.” என்றனர்.
இது குறித்து, தி.மு.க கவுன்சிலரின் கணவர் நந்தாவிடம் பேசினோம். “கவுன்சிலர்கள் ஒன்றாகப் பேசியது உண்மைதான். ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் முடிவு எனச் சொல்லப்படுவது தவறான தகவல். அதேபோல், என் மனைவியை சேர்மனாக்க முயல்வதாகச் சொல்லப்படுவதும் தவறான செய்தி. அப்படி ஏதுமில்லை. ஆனால், ‘நகராட்சியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை’ என்ற அதிருப்தியைப் பதிவுசெய்து, நாளை நடைபெறவிருக்கும் நகரமன்றக் கூட்டத்தின் தீர்மானத்தைப் புறக்கணிப்பு செய்து, சுமார் 15 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யவிருக்கிறார்கள். வெளிநடப்பு செய்யவிருப்பதற்கான காரணம் நிறைய இருக்கிறது, வெளிப்படையாகப் பேச முடியாது. ‘நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது’ என்பதெல்லாம் தவறான செய்தி” என்றார்.