சென்னை: “ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத் துறை, திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்று நினைத்து தலைமைச் செயலகத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்து சென்றதுக்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மின்சாரத் துறை மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் காலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையிட வந்தபோது, முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், சோதனை நிறைவுபெற்றவுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத் துறை, திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்று நினைத்து தலைமைச் செயலகத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறது.
மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், இவ்வாறு அமலாக்கத் துறை அத்துமீறி நுழைவது மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன. தமிழ்நாட்டிலும் ஒன்றிய பாஜக அரசு அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத் துறையை பயன்படுத்துவதும், திமுக அரசை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது” என்று அவர் கூறியுள்ளார்.