பிரபல வில்லன் நடிகர் கசான் கான் காலமானார்
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் கசான் கான் காலமானார். கேரளாவை பூர்வீமாக கொண்ட இவர் பெரும்பாலும் வில்லன் வேடங்களிலேயே நடித்தார். மாரடைப்பு காரணமாக நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது.
தமிழில் பிரபு நடித்த செந்தமிழ் பாட்டு படம் மூலம் வில்லனாக அறிமுகமான இவர் தொடர்ந்து கலைஞன், வேடன், முறைமாமன், சேதுபதி ஐபிஎஸ், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, வல்லரசு உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லனாக மிரட்டினார். கடைசியாக தமிழில் பட்டைய கிளப்பு என்ற படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தனது தாய்மொழியான மலையாளத்திலும் தி கிங், தி கேங், சிஐடி மூசா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். கன்னட சினிமாவிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவை விட்டு விலகி தனது தொழிலை கவனித்து வந்தார். இந்நிலையில் மாரடைப்பால் அவர் மறைந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையாள நடிகரான திலீப் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.