புதுமுகங்கள் உருவாக்கி உள்ள சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் படம்

புல்லி மூவீஸ் சார்பில் எஸ்.சத்யநாராயணன் தயாரித்துள்ள படம் கண்டதை படிக்காதே. ஜோதி முருகன் இயக்கி உள்ளார். ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ், ஆரியன், ராஜ் நவீன், சபிதா ஆனந்த் இவர்களுடன் தயாரிப்பாளர் சத்யநாராயணனும் நடித்துள்ளார். செல்வா ஜானகிராஜ் இசை அமைக்கிறார், மஹிபாலன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஜோதி முருகன் கூறியதாவது: மனித புலன்களுக்கு அகப்படாத வகையில் நடக்கும் அமானுஷ்யக் கதைகளைத் திரைப்படத்தில் சரியாகச் சொன்னால் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த நம்பிக்கையில் உருவாகி இருக்கும் படம்தான் 'கண்டதை படிக்காதே'. இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் படமாகும்.

சென்னையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறாள். அதன் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சிவராமன் புலனாய்வில் இறங்குகிறார். மர்மத்தின் வேர் தேடி கொடைக்கானல் செல்கிறார். அங்கே போன பிறகுதான் தற்கொலைகளுக்கான திகிலான காரணம் அவருக்குத் தெரிகிறது.

மணிமாறன் என்ற எழுத்தாளர். ஒரு திகில் கதையை எழுதி இருக்கிறார். அந்தக் கதையைப் படித்த அவரது பேத்தி நிஷா அதை இணையதளத்தில் பதிவிடுகிறாள். அந்தக் கதையைப் படித்ததால் நிஷாவும் இறந்து போகிறாள். இணையதளத்தில் வந்த அந்தக் கதையைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள்.

இந்தப் பட்டியலில் புலனாய்வு செய்யப்போன காவல்துறை அதிகாரியின் தங்கையும் அடக்கம். அதனால் இதன் பின்னணியில் உள்ள மர்மத்தைத் தேடி விசாரணை செய்கிறார். அவர் அதற்காக கொடைக்கானல் செல்கிறார். அங்கே போய்ப் பார்த்தால் நிஷா இல்லை. அவர் நிஷாவின் பாட்டியைத்தான் சந்திக்கிறார்.

இதில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயலும் போது இதன் பின்னணியில் ஒரு சாமியார் இருப்பது தெரிகிறது. அவரது கட்டுப்பாட்டில் உள்ள இறந்துபோன ஒரு தம்பதிகளின் ஆவிகள் செய்யும் வேலைதான் அது. இணையத்தில் வெளிவந்தது அவர்களது சொந்தக் கதையாகும். அவர்களின் கதையைப் படிப்பவர்களை அந்த ஆவிகள் கொன்றுவிடுகின்றன என்று தெரிகிறது.

அந்த சாமியார் சிவராமனைக் கொல்ல முயல்கிறார். சிவராமன் அதை எப்படி எதிர்கொள்கிறார்? அந்த ஆத்மாக்களைத் தடுத்து எப்படி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.80 சதவீத படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ,படப்பை போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. வருகிற 30ம் தேதி வெளியாகிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.