புதுடெல்லி: “முக்கியமான அமைச்சகங்களை நடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ஏன் தேவை?” என்று ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அஸ்வினி வைஷ்ணவ் தனது அமைச்சகங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாவதைப் பார்த்து நான் திகைக்கிறேன். முதலில் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து எனும் சோகம். இந்த விவகாரத்தில், அமைச்சரோ அல்லது அவரது அதிகாரிகளோ டிசம்பர் 2022-ல் சமர்ப்பிக்கப்பட்ட CAG அறிக்கையையும், பிப்ரவரி 2023-ல் முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளரால் எழுதப்பட்ட கடிதத்தையும் படிக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
இதன் தொடர்ச்சியாக, CoWin தளத்தில் இருந்து பெருமளவிலான தரவுகள் கசிந்த நிலையில், லட்சக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியது உண்மையல்ல என்பது அம்பலமானது.
அடுத்ததாக, ட்விட்டர் கணக்குகளைத் தடுக்க அல்லது நீக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டதும், வருமான வரித் துறையைக் கட்டவிழ்த்துவிட்டு ட்விட்டர் நிறுவன ஊழியர்களைக் கைது செய்வதற்கான அச்சுறுத்தல்களை விடுத்ததும், விசாரணை அமைப்புகள் சுதந்திரமானவை என்ற கூற்றை பொய்ப்பித்தது. இந்த முக்கியமான அமைச்சகங்களை நடத்துவதற்கும், மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதற்கும் தேர்ந்தெடுக்கப்படாத ‘நிபுணர்’ தேவையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.