ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் பாலேசார் பகுதியைச் சேர்ந்த தருணா சர்மா என்ற இளம் பெண் தன்னுடன் பள்ளியில் படித்த இளைஞரான சுரேந்திரா சங்கலா என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்தில் தருணாவின் தந்தைக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது.
திருமணமான 10வது நாளிலேயே தம்பதியை பெண் வீட்டார் கண்டுபிடித்து, காவல்நிலையத்திற்கு கூட்டி வந்து இருவரையும் கட்டாயமாக பிரித்து வைத்துள்ளனர். அதன் பின்னர் அடுத்த 5 மாதத்திற்கு பெண்ணை தலைமறைவாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டு போய் வைத்துள்ளனர். யாரிடமும் பேச விடக்கூடாது என்ற நோக்கில் பெண்ணை அவர்கள் செல்போன் கூட பயன்படுத்த அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், தருணாவுக்கு திருமணமான விவகாரத்தை மறைத்து கடந்த மே 1ஆம் தேதி ஜிதேந்திரா ஜோஷி என்ற நபருக்கு இரண்டாவது முறை திருமணம் செய்துவைத்துள்ளனர். தருணாவுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது குறித்து இரண்டாம் கணவரிடம் மறைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பெண் மூலமாகவே பின்னர் அவருக்கு உண்மை தெரியவந்துள்ளது.
இதன்பின்னர், இரண்டாம் கணவர் ஜிதேந்திரா தன்னை தாக்கி கொடுமைபடுத்துவதாக தருணா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தான் முதல் கணவரிடமே சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறி இரண்டாம் கணவரின் கையில் ராக்கி கட்டி அவரை சகோதரர் போல எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இரண்டாம் கணவர் ஜிதேந்திரா கூறுகையில்,
“பெண்ணின் குடும்பத்தார் என்னை திட்டமிட்டு வலையில் வீழ்த்திவிட்டார்கள். நானாக சென்று அந்த பெண்ணை திருமணம் செய்ய கேட்கவில்லை.
என்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என்றால் அப்போதே தெரிவித்து இருக்கலாம். என்னை பிளாக்மெயில் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தருணா இது போன்று பேசியும், செய்தும் வருகிறார்” என்று பதில் புகார் தெரிவித்துள்ளார்.
விவகாரம் பூதாகரமாகி காவல்துறையின் கவனத்திற்கு சென்ற நிலையில், சகி என்ற பெண்கள் நல ஆலோசனை மையத்திற்கு தருணா அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவர் தனது முதல் கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.