சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஆயுதங்களோடு குவிக்கப்பட்டுள்ளனர்.
முந்தைய சோதனைகளின்போது இந்த அளவுக்கு பாதுகாப்பு முன்னெடுப்புகள் இல்லாததால் உ.பி.க்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் ஆகியோர் வந்துள்ளனர்.
ஆனால், பாதுகாப்பு படையினர் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் இருவரும் கேட்டிற்கு வெளியே காத்திருக்கின்றனர். மேலும், செந்தில் பாலாஜி வீட்டு கேட்டின் சிறிய ஓட்டை வழியே ஆர்.எஸ். பாரதி உள்ளே என்ன நடக்கிறது என்று எட்டி பார்க்கும் புடைக்கப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. தற்போது செந்தில் பாலாஜி வீட்டில் பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சரின் வீடு மற்றும் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் குமார் வீடு உட்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் ( 2011- 15) போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றதில் வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தேவையென்றால் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது.
அதன் பேரில் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அவர் கைதாகி கஸ்டடிக்கு எடுக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இணையத்தில் அதுகுறித்து சூடான விவாதங்கள் அனல் பறக்கின்றன.