புதுடெல்லி: ‘வேலைவாய்ப்பு மேளா’ பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அடையாளமாக மாறியிருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், பரம்பரை அரசியல் கட்சிகள், அரசு வேலைவாய்ப்புகளில் வாரிசுரிமை மற்றும் ஊழலை ஊக்குவித்து, பல்வேறு பதவிகளுக்கு ‘ரேட் கார்டு’ மூலமாக இளைஞர்களை சுரண்டியதாக குற்றம்சாட்டிய பிரதமர் தனது அரசு இளைஞர்களின் நலனை பாதுகாக்கின்றது என்றும் தெரிவித்தார்.
‘ரோஜ்கார் மேளா’ எனும் வேலைவாய்ப்பு மேளா மூலம் 70,000-க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று (ஜூன் 13) வழங்கினார். பின்னர் புதிதாக பணியில் இணைந்திருப்போர்களிடம் உரையாற்றிய பிரதமர் பேசியது: “முன்பு அரசு பணிக்கு ஆள்சேர்ப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளாகும். ஆனால், தற்போது சில மாதங்களிலேயே வெளிப்படையாக பணியமர்த்தல் பணி நடக்கிறது.
பரம்பரை அரசியல் கட்சிகள் எல்லா துறைகளிலும் எவ்வாறு வாரிசுரிமை மற்றும் ஊழலை வளர்த்திருக்கிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அரசு வேலைகளில் அவர்கள் இதை அதிகமாக ஊக்குவித்திருக்கிறார்கள். அத்தகையக் கட்சியினர் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள். கடந்த 2014-ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் அரசு வேலைகளுக்கான ஆள்சேர்ப்பில் வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்பட்டு, வாரிசுரிமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியா தற்போது நிலையான, பாதுகாப்பான, பலம் வாய்ந்த நாடாக இருக்கின்றது. தீர்க்கமானத் தன்மை இந்தியாவின் அடையாளமாக மாறியிருக்கிறது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் முத்ரா யோஜனா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டங்கள் மூலம் சுயவேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
நமது பொருளாதாரம் கடந்த காலங்களில் இப்படியான ஒரு வலிமையான நிலையில் இருந்தது இல்லை. ஒருபுறம் பெருந்தொற்று காரணமாக உருவான மந்தநிலை, மறுபுறம் போர் (உக்ரைன்) காரணமாக உணவு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. இவைகளுக்கு இடையில் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த அரசு தனியார் துறையில் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ரோஜ்கர் மேளா பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அடையாளமாக மாறியிருக்கிறது. ‘ஆசாதி கா அம்ரித் கால்’ தொடங்கி இருப்பதால் அரசுப் பணிகளில் சேர்பவர்களுக்கு இது ஒரு சவாலான காலமாகும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பணி அவர்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் ஊழல், திட்டங்களில் முறைகேடு, பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்துதல் போன்றவை முந்தைய அரசின் அடையாளமாக இருந்தன. இன்று இந்தியா அதன் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக, அரசு அதன் தீர்க்கத் தன்மைக்காக, பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றத்திற்கான வளர்ச்சிக்காக அறியப்படுகிறது” என்று அவர் பேசினார்.