9 ஆண்டுகளில் 8.8 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன: ஸ்மிருதி இரானி

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி அரசு, கடந்த 9 ஆண்டுகளில் 8.8 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

அரசு வேலைவாய்ப்புக்கான ரோகர் மேலா திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். இதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பணி வாய்ப்பு பெற்ற பலருக்கும் பணி ஆணையை நேரில் வழங்கினார்.

இதையடுத்துப் பேசிய அவர், “காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசைக் காட்டிலும் 58 சதவீத கூடுதல் வேலைவாய்ப்புகளை நரேந்திர மோடி அரசு வழங்கி இருக்கிறது. இன்று பணி ஆணை பெறும் 70 ஆயிரம் பயனாளிகளையும் சேர்த்து, கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 8.8 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை மோடி அரசு வழங்கி இருக்கிறது.

அரசுப் பணியில் இருந்து சேவை செய்வது மிகவும் முக்கியமானது. அதேநேரத்தில், எந்த இடத்தில் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமானது அல்ல. புதிய வேலைவாய்ப்புகள் அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒருவர் வேலைவாய்ப்பைப் பெறுவதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெறுவர்.

சுய வேலைவாய்ப்பில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முத்ரா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் எவ்வித உத்தரவாத ஆவணமும் இன்றி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

முத்ரா திட்டத்தின் கீழ் 40 கோடி கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 27 கோடி கடன்கள் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் கடன் கேட்டு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை வெறும் காகிதமாகக் கருதக்கூடாது. அது அவர்களின் கனவு. நீங்கள் கடனை வழங்குவதில் அல்லது நிராகரிப்பதில்தான் அவர்களின் கனவு நனவாவதும், உடைந்து போவதும் இருக்கிறது.

மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் ஜல் ஜீவன் திட்டத்திற்காக மத்திய அரசு 4 லட்சம் கோடி ரூபாய் வழங்கி இருக்கிறது. ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும் ரூ. 40 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.