Case of hoarding government documents: Trump indicted | கோர்டில் ஆஜரானார் டிரம்ப்: குற்றச்சாட்டு பதிவு

புளோரிடா,: அரசு ரகசிய ஆவணங்களை தனது பங்களா குளியல் அறையில் பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மியாமி கோர்ட்டில் ஆஜராக வந்த முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் ,76 , அவரது உதவியாளர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப்,76, இவர் தன் பதவி காலத்தின் போது அரசின் முக்கிய ரகசிய ஆவணங்களை, தன் தனிப்பட்ட பங்களாவில், குளியலறை உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்திருந்ததாக, புகைப்பட ஆதாரங்கள் வெளியாகின. அமெரிக்க சட்டங்களின்படி, தன் பதவிக் காலத்தில் தான் பார்க்கும் மற்றும் வைத்திருக்கும் முக்கிய ரகசிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை, அதிபர் பதவியில் இருந்து வெளியேறுபவர், அந்நாட்டின் ஆவண காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும்.ஆனால், டொனால்டு டிரம்ப் இதை மீறி, முக்கிய ஆவணங்களை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள அவருடைய வீட்டில், கடந்தாண்டு சோதனை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.

latest tamil news

இந்த விவகாரத்தில், டொனால்டு டிரம்ப் மீது, ஏழு பிரிவுகளில், 37 குற்றங்கள் மியாமி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில், டொனால்டு டிரம்ப் குற்றம் செய்துள்ளார் என்பதற்கான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், (ஜூன்.13) மியாமி கோர்ட்டில் டிரம்ப் ஆஜரானார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதையடுத்து டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர் வால்ட் நெளடா ஆகிய இருவரையும் கோர்ட் வளாகத்திலேயே வைத்து மியாமி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக டிரம்ப் மீதான குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளதாவது, டிரம்ப் பதுக்கி வைத்துள்ள இந்த ஆவணங்கள், அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்புடையவை. மேலும், வெளிநாடுகளுடனான துாதரக உறவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. இந்த ஆவணங்களை, டிரம்ப் சிலருக்கு காண்பித்ததும் மிகப் பெரும் குற்றமாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசியலில் பின்னடைவு

ஏற்கனவே, பாலியல் புகார் கூறிய நடிகைக்கு பணம் கொடுக்க முயன்றது தொடர்பாக, நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகி, அது உறுதி செய்யப்பட்டன.இதைத் தவிர, வாஷிங்டன், அட்லாண்டா நீதிமன்றங்களிலும் டிரம்ப் மீது சில வழக்குகள் உள்ளன. அவற்றிலும், அவர் மீது குற்றச்சாட்டு பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற வழக்குகளை விட, மியாமி நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை.

அடுத்தாண்டு டிசம்பரில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட, டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணைகள், அவருடைய முயற்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.