அகமதாபாத்: அரபிக் கடலில் உருவெடுத்துள்ள பிப்பர்ஜாய் புயலால் அதிக பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டிருப்பதால், கடற்கரையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மக்களை அப்புறப்படுத்துவதற்கானப் பணிகளை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது.
அரபிக் கடலில் தீவிர புயலாக உருவெடுத்துள்ள பிப்பர்ஜாய், நாளை மறுநாள் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதிக்கும், ஜாக்குவா போர்ட்டுக்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடற்கரையோரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளை குஜராத் அரசு தொடங்கி உள்ளது. கட்ச், போர்பந்தர், தேவ்பூமி துவாரகா, ஜாம்நகர், ஜூனாகட், மோர்பி ஆகிய கடற்கரையோர மாவட்டங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று அதிகாலை நிலவரப்படி பிப்பர்ஜாய் புயல், போர்பந்தருக்கு தென்மேற்கே 290 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜாக்குவா போர்ட் நகருக்கு தெற்கு-தென்மேற்கு திசையில் 360 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் கடரையைக் கடக்கும்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மீட்புப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீட்பு ஆணையர் அலோக் பாண்டே, “கடற்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலில், கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இரண்டாம் கட்டத்தில், 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவ்வாறு அழைத்துச் செல்லப்படும்போது குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெளியேற்றப்படும் மக்களுக்குத் தேவையான இடம், உணவு, மருந்துப்பொருட்கள் போன்றவற்றை வழங்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 12 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 12 குழுக்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
“புயல் காரணமாக படகுகளை துறைமுகங்களில் நிறுத்தும் பணி நேற்றே தொடங்கிவிட்டது. ஜாக்குவா நகர் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரை பகுதிகளைச் சேர்ந்த படகுகள், அதிக சேதாரம் ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கில் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கண்ட்லா துறைமுகம் மூடப்பட்டு விட்டது. அந்த துறைமுகத்தைச் சுற்றி வசித்து வந்த துறைமுகப் பணியாளர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.