காந்திநகர்: குஜராத்தை ஒட்டிய அரபிக் கடலில் உருவாகி உள்ள பிப்பர்ஜாய் புயலை கருத்தில் கொண்டு சுகாதார அவசரநிலையை சமாளிக்கத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அரபிக் கடலில் தீவிர புயலாக உருவெடுத்துள்ள பிப்பர்ஜாய், அதி தீவிர புயலாக மாறி குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதிக்கும், ஜாக்குவா போர்ட்டுக்கும் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரத்தில், பாதிப்புகளை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில் மத்திய அரசும், குஜராத் அரசும் தீவிரம் காட்டி வருகின்றன.
மன்சுக் மாண்டவியா ஆய்வு: இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத்தின் பூஜ் பகுதிக்கு இன்று(ஜூன் 13) சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள ராணுவ முகாமுக்குச் சென்ற அவர், ராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார். மேலும், கடற்கரை பகுதிக்குச் சென்று கடல் சீற்றம் குறித்து பார்வையிட்டார். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் கணேஷ்பாய் படேலும் அவருடன் உடன் இருந்தார்.
ஆய்வுக்குப் பிறகு மன்சுக் மாண்டவியா தெரிவித்ததாவது: “மத்திய சுகாதாரத்துறையின் பிராந்திய அலுவலகங்கள் மூலம் புயல் பாதிப்புகள் உண்ணிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன.
எத்தகைய சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ள மத்திய, மாநில சுகாதாரத்துறை தயாராக உள்ளது. குஜராத் சுகாதாரத்துறை மட்டுமின்றி, நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனைகளான ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, லேடி ஹார்டின்ஜ் மருத்துவக் கல்லூரி, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ், ஜோத்பூர் எய்ம்ஸ், நாக்பூர் எய்ம்ஸ் ஆகிய 6 மருத்துவமனைகள் உதவுவதற்குத் தயார் நிலையில் உள்ளன.
மக்களுக்கு மன ரீதியில் பாதிப்பு ஏற்படுமானால் அதில் இருந்து அவர்களை விடுவிக்கும் நோக்கில் உளவியல் சிகிச்சை அளிப்பதற்காக பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையும் தயார் நிலையில் உள்ளது. மருத்துவ உபகரணங்கள் தேவை எனில், அவற்றை வழங்க தயாராக இருக்குமாறு ஹெச்.எல்.எல். லைப்கேர் நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அமித் ஷா ஆய்வு: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆய்வு மேற்கொண்டார். இதில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளை மறுநாள் கரையைக் கடக்கும்: தீவிர புயலாக உருவெடுத்துள்ள பிப்பர்ஜாய் புயல் இன்று அதீ தீவிர புயலாக உருவெடுக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதிக்கும் கட்ச் பகுதிக்கும் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.