சென்னை : தமிழ்நாட்டில் பிறந்து உலகளவில் போற்றப்படும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜிவி பிரகாஷ். அவர் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு திரைப்பிரபலங்கள்,ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு தொலைக்காட்சி மற்றும் ரேடியோவிலும் இவர் இசையமைத்த பாடல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
சிறுவயதிலே இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு குறித்து இன்று தெரிந்து கொள்ளலாமா?
சிக்குபுக்கு ரயிலே : இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகனான ஜி வி பிரகாஷ் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோதிலிருந்தே தாய்மாமாவின் தோள்களில் இசையை கற்றுக்கொண்டார். ஜென்டில்மேன் படத்தில் வரும் சிக்குபுக்கு ரயிலே பாடலில் முதலில் வரும் சிக்குபுக்கு ரயிலே என்று மழலைக்குரலின் மூலம் தனது இசைப்பயணத்தை தொடங்கினார்.
உருகுதே மருகுதே : ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள். இசையின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஜிவி பிரகாஷ் வெயில் படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெயிலோடு விளையாடி, உருகுதே மருகுதே, என ஹிட் பாடல்களை கொடுத்து. யாருப்பா இந்த பையன் என்று கோலிவுட்டை பேச வைத்தார்.
அசத்தினார் : இதைத் தொடர்ந்து பொல்லாதவன் படத்திற்கு இசையமைத்தார். அதில், படத்திலும் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ பாடலை ‘பொல்லாதவன் படத்தில் ரீமிக்ஸ் செய்து இளைஞர்களை ஆட்டம் போடவைத்தார்.
நடிகர் அவதாரம் : தொடர்ந்த படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த ஜிவி பிரகாஷ், 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் வணிகரீதியாக வெற்றி பெற்றதோடு ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. அதைத் தொடர்ந்து நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினார். படிப்படியாக முன்னேறி இன்று அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கோடியில் சொத்து : நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார் 75 கோடி சொத்துவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. நடிப்பு, இசை என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எப்போதும் எளிமையாக இருக்கக்கூடியவர் ஜிவி. இவர் தனது பள்ளி தோழி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை உள்ளது.