Kazan Khan: `சினிமாவில் வில்லன்; ரியல் லைஃப்பில் ஜெம் பர்சன்!' – இயக்குநர் விக்ரமன் உருக்கம்

1990 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் வில்லனாக கோலோச்சியவர் கசன்கான். இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, சுந்தர்.சி உள்பட பலரின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஆகவே நடித்தவர் கசன்கான். நேற்று மாலை மாரடைப்பு காரணமாக உயிழந்ததாக தகவல் வெளியானது.

பி.வாசுவின் இயக்கத்தில் பிரபுவின் நடிப்பில் வெளியான ‘செந்தமிழ்ப் பாட்டு’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் கசன்கான். விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்தி என அப்போதைய ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதிலும் விஜயகாந்தின் ‘என் ஆசை மச்சான்’, ‘காந்தி பிறந்த மண்’, ‘வல்லரசு’, ‘கறுப்பு நிலா’, ‘வானத்தைப் போல’ என பல படங்களிலும் வில்லனாக கெத்து காட்டியவர் கசன். இவரது பூர்வீகம் கேரளா. கசன்கானின் மறைவு குறித்து இயக்குநர் விக்ரமனிடம் கேட்டேன்.

விக்ரமன்

”இன்னிக்குத்தான் தகவல் கேள்விப்பட்டேன். 1990 காலகட்டங்கள்ல எல்லா படங்களிலும் அவரைப் பார்க்க முடியும். அவரது நடித்த பல படங்கள் நூறு நாளை தாண்டியிருக்கு. என்கிட்ட ரொம்பவும் மரியாதையா இருப்பார். மென்மையா பேசுவார். ‘வானத்தைப் போல’ படத்துக்கு முன்னாடியே அவர் விஜயகாந்த் சார் படங்கள்ல நிறைய நடிச்சிருக்கறதால, ஸ்பாட்டுல ‘கேப்டன்’ ‘கேப்டன்’ன்னு தான் விஜயகாந்த் சார்கிட்ட பணிவா நடந்துப்பார். ரீல் வாழ்க்கையில் வில்லனாக இருந்தாலும் ரியல் வாழ்க்கையில் ஜெம் பர்சன்னா வாழ்ந்திட்டு போயிருக்கார். மாரடைப்பினால் மறைவுனு நானும் செய்திகள் மூலமாகத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். கன்னடம், மலையாளம்னு 50 படங்களுக்கு மேலேயே நடிச்சிருப்பார். நல்ல மனிதரை திரையுலகம் இழந்துட்டோம். சமீபத்துல தான் சரத்பாபு சார் மறைவால ஏற்பட்ட வேதனை மறையறதுக்குள்ள கசன்கானின் செய்தியும் அதிர்ச்சியா இருக்குது” என்கிறார் கனத்த மனதுடன்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.