சென்னை: Maaveeran (மாவீரன்) மாவீரன் படத்தில் இடம்பெற்றிருக்கும் வண்ணாரப்பேட்டையில பாடல் நாளை வெளியாகவிருக்கும் சூழலில் அதுதொடர்பான க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்த டாக்டர், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் நடித்த டான் ஆகிய இரண்டு படங்களும் நூறு கோடி ரூபாயை வசூலித்தன. அதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனூதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். அப்படத்தின் மூலம் நிச்சயம் தெலுங்கில் மார்கெட்டை பிடிக்கலாம் என்ற அவரது கணக்கு தவிடுபொடியானது. அந்த அளவுக்கு படம் தோல்வியை சந்தித்தது.
மாவீரன்: சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை ஆச்சரியமாக பார்த்த பலரும் பிரின்ஸ் தோல்வியை உள்ளுக்குள் ரசித்ததாக ஒரு தகவல் வெளியானது. அதனை உணர்ந்துகொண்ட சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் விட்டதை பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதன்படி மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார்.
நம்பிக்கை அதானே எல்லாம்: தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் என்பதால் கதையில் எந்த வித சொதப்பலும் இருக்காது என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் எஸ்கே ரசிகரக்ள். எனவே மாவீரன் படம் சிவகார்த்திகேயனுக்கு தரமான கம்பேக்காக இருக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். முதலில் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் வெளியாவதால் ஜூலை 14ஆம் தேதி மாவீரன் வெளியாகிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ்: சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸுக்கும் சிக்கல் வருவது அவ்வப்போது நடப்பதால் நம்பிக்கையான கைகளில் மாவீரன் செல்ல வேண்டும் என படக்குழுவும், ரசிகர்களும் நினைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்படி தமிழ்நாட்டில் படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதன் காரணமாக திரையரங்குகள் அதிக அளவில் மாவீரனுக்கு கிடைக்கும்.
செகண்ட் சிங்கிள்: மாவீரன் டப்பிங்கை சிவகார்த்திகேயன் சில நாள்களுக்கு முன்பு முடித்த சூழலில் நேற்று படத்தின் இரண்டாவது சிங்கிளான வண்ணாரப்பேட்டையில பாடல் ஜூன் 14ஆம் தேதி (நாளை) வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. அதுதொடர்பான ப்ரோமோ வீடியோவும் ரசிகர்களிடம் லைக்ஸையும், ஹார்ட்டின்களையும் அள்ளியது. பாடலை சிவகார்த்திகேயனும், அதிதி ஷங்கரும் பாடியிருக்கின்றனர்.
க்ளிம்ப்ஸ்: இந்நிலையில் இன்று அதுதொடர்பான க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருக்கிறது. அதனை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதிதி ஷங்கர் ஏற்கனவே தான் அறிமுகமான விருமன் படத்தில் பாடல் பாடி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் பாடலிலும் அதிதி நிச்சயம் கலக்கியிருப்பார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.