`மிகச்சிறந்த பிசினஸ் திட்டம் என்பது ஒன்றுமில்லை. தரம்… அவ்வளவுதான்.’ – அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஜான் லேஸ்ஸெட்டர் (John Lasseter).
ஒரு தனிநபரின் முன்னேற்றம் என்பது எப்படி ஏற்படும்… பரம்பரை பரம்பரையாக சொத்து இருந்து, பாரம்பர்யமாகச் செய்துவரும் தொழிலால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படலாம். திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, யாரோ ஒருவரின் சொத்து கைக்கு வந்து உயரே போகலாம். யாராவது கைகொடுத்து, தூக்கிவிட்டு, நல்ல வழி காட்டி ஆளாக்கிவிடலாம். லாட்டரிச்சீட்டு விழுந்துகூட வாழ்க்கையின் உச்சியைத் தொட்டுவிடலாம். ஆனால், உழைத்து, மிகக் கடுமையாக உழைத்து ஒருவர் நல்ல நிலைமையை அடைவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியம். அதிலும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களா… மிகக் கடினம். ஆனால், `முடியும்’ என்ற நம்பிக்கையோடு, உழைப்பு ஒன்றையே மூலதனமாக விதைத்து, `எம்ஜிஎம்’ (MGM) என்ற ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார் ஒருவர். அவர், எம்.ஜி.முத்து.
பள்ளி வகுப்பறை. ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், ஒரு சிறுவனுக்கு மட்டும் ஆசிரியர் நடத்திய பாடம் காதிலேயே விழவில்லை. வயிற்றை என்னவோ செய்தது. உட்காரவே முடியவில்லை. அது வயிற்று வலியல்ல… பசி! சிறுவனுக்கு 10 வயது. மிக தாமதமாகத்தான் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். பள்ளியில் சேர்ந்து அதிக நாள்களும் ஆகவில்லை. ஆசிரியரிடம் விரலைக் காட்டிவிட்டு வெளியே ஓடிய அந்தச் சிறுவன், அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் பக்கம் திரும்பவே இல்லை.
அந்தச் சிறுவனின் முழுப்பெயர் மனுவேல் ஞான முத்து. சுருக்கமாக, `எம்.ஜி.முத்து.’ இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் திசையன்விளை என்ற சின்ன கிராமத்தில், 1935-ம் ஆண்டு பிறந்தார். ஏழ்மை நிலையிலிருந்தது குடும்பம். அப்பா விவசாயக்கூலி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார். பள்ளிக்கூடமும் படிப்பும் இல்லையென்று ஆன பிறகு, அப்பாவுடன், அந்த இளம் வயதிலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார் முத்து. அவருடைய வருமானமும் சேர்ந்துகொள்ள, குடும்பத்தில் பசி கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. பல வருடங்களுக்கு அப்பாவுடன் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார் முத்து.
`நான் எந்த அளவுக்குக் கடினமாக உழைக்கிறேனோ, அந்த அளவுக்கு என் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசும்.’ – போலிஷ் – அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர், சாமுவேல் கோல்டுவின் (Samuel Goldwyn)
கிராமம். கூலி வேலை. இதுதான் என்று இல்லை, என்ன வேலை கிடைத்தாலும் செய்தார். வீட்டில் இருப்பவர்களின் பசியை அடக்க, கிடைத்த ஊதியம் உதவினாலும் அது தன் எதிர்காலம் இல்லை என்கிற உண்மை முத்துவுக்கு உறைக்க ஆரம்பித்திருந்தது. எங்கெங்கேயோ கேட்டு, யார் யாரிடமோ பேசி ஒருவழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தார். அது 1957-ம் ஆண்டு. குட்டியூண்டு கிராமமான திசையன்விளைக்கும், பெரு நகரமான அப்போதைய மெட்ராஸ் பட்டினத்துக்கும் இருக்கும் வித்தியாசம் அவரை மலைக்கவைத்தது. காலையிலேயே சுறுசுறுவென வேலைக்குச் செல்லும் மனிதர்கள் நம்பிக்கையை விதைத்தார்கள். `பாடுபட்டால் பிழைத்துக்கொள்ளலாம்; கடினமாக உழைத்தால் நல்ல வாழ்க்கை வாழலாம்’ என்பது அவருக்கு அந்த வயதிலேயே புரிந்திருந்துபோனது. புரியவைத்தது மெட்ராஸ் நகரம்.
படிக்காதவர். ஆனால், உழைப்பை மட்டுமே நம்பியிருந்தவர். அவருக்குக் கூலி வேலைதான் கிடைத்தது, சென்னை துறைமுகத்தில். அதையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார் முத்து. `ஏ வாழ்க்கையே… வா, நீயா நானா பார்த்துவிடுவோம்’ என்ற ஓர் உறுதி அவருக்குள் பிறந்தது. இரவு பகல் பார்க்காமல் உழைத்தார். மூட்டை சுமந்தார், மூட்டைகளை அடுக்கிய வண்டிகளை துறைமுகத்துக்குள் அங்குமிங்கும் தள்ளிக்கொண்டு போனார். எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் விருப்பப்பட்டு செய்தார். இடையில், அவர் ஒன்றை மட்டும் செய்யத் தவறவில்லை. அது சேமிப்பு. கிடைத்த கூலிப்பணத்தில் கணிசமான தொகையை யாருக்கும் தெரியாமல் சிறுகச் சிறுக சேமிக்க ஆரம்பித்தார் முத்து.
`என் முதுகில் இன்னமும்கூட அந்தத் தழும்புகளில் சில இருக்கின்றன. நான் கூலி வேலை பார்த்ததன் அழுத்தமான அடையாளங்கள்.’ – பின்னாளில் ஒரு பேட்டியில் எம்.ஜி.முத்து
சில வருடங்களில் அவர் கையில் கணிசமாகப் பணம் சேர்ந்திருந்தது. `கையிலிருக்கும் பணத்தை என்ன செய்யலாம்… இதை முதலீடு செய்து ஒரு தொழில் தொடங்கலாம். என்ன தொழில்..?’ பல நாள்களாக யோசித்து ஒரு தொழிலைத் தொடங்க முடிவெடுத்தார் முத்து. அது லாஜிஸ்டிக்ஸ் (Logistics). ஓரிடத்திலிருந்து சரக்குகளைப் பாதுகாத்து, ஸ்டோர் செய்து அவற்றைச் சேரவேண்டிய இடத்தில் பத்திரமாகச் சேர்க்கும் நுணுக்கமான வேலை. துறைமுகத்தில் கூலி வேலை பார்த்ததால், அதில் நல்ல அனுபவம் இருந்ததால் லாஜிஸ்டிக்தான் தனக்கு ஏற்ற தொழில் என்கிற முடிவுக்கு வந்திருந்தார் முத்து. கப்பல் போக்குவரத்தை முதன்மையாக வைத்துக்கொண்டார்.
உழைப்புதான் அவருக்குக் கைகொடுத்தது, வளர்த்தது, தூக்கிவிட்டது. என்றாலும் அவருக்கு இருக்கும் தொழில் பக்தி, நேர்மை, சக மனிதர்களோடு பழகும் பண்பு, ஒழுக்கம்… இவையெல்லாம் அவருக்கு பலருடன் ஓர் இணக்கத்தைக் கொடுத்திருந்தன; எல்லாவற்றுக்கும் மேல் `இந்த மனிதரை நம்பலாம்’ என்கிற எண்ணத்தைப் பலருக்கும் விதைத்திருந்தன. லாஜிஸ்டிக்ஸ் சாதாரணமான தொழில் கிடையாது. அந்தத் துறையில் அன்றைக்குக் கோலோச்சியவர்களெல்லாம் ஜாம்பவான்கள். பெரும் பணக்காரர்கள். அவர்களோடு போட்டி போட அவரால் முடியுமா… முடியும் என்று நிரூபித்தார் முத்து.
சிறிய அளவில் தொடங்கிய லாஜிஸ்டிக்ஸ் பிசினஸில் அவர் கறாராக இருந்தார். என்ன நடந்தாலும், வாடிக்கையாளருக்கு உத்தரவாதம் தந்த குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக சரக்கு டெலிவரி ஆகியிருக்க வேண்டும். இந்த கறார்த்தனம் அவருக்குக் கைகொடுத்தது. அதோடு வாடிக்கையாளர்களிடம் அவர் நடந்துகொண்ட கனிவான நடத்தை பல புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. ஒரு தொழிலுக்கு சிறந்த விளம்பரம் என்பது வாடிக்கையாளர்கள் தரும் நற் சான்றிதழ். வெறும் வாய் வார்த்தை. `முத்துவோட லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பெஸ்ட்டுப்பா’ என்கிற வாடிக்கையாளர்களின் நல்வார்த்தைகள் அவருடைய தொழிலுக்கும் பலம் சேர்க்க ஆரம்பித்தன. லாஜிஸ்டிக் தொழில் விரிவடைந்துகொண்டே போனது, அவரே எதிர்பாராத அளவுக்கு!
`சோம்பேறித்தனம், பார்ப்பதற்கு வேண்டுமானால் கவர்ச்சிகரமாகத் தெரியலாம். ஆனால், உழைப்புதான் திருப்தி தரும்.’ – ஆன் ஃபிராங்க் (Anne Frank).
எம்.ஜி.முத்து, லாஜிஸ்டிக்கில் ஆரம்பித்த சிறு தொழிலை பிரமாண்டமாக விரிவுபடுத்தினார். `எம்ஜிஎம் குரூப்’ என்கிற தனி தொழில் சாம்ராஜ்ஜியமாக அதை வளர்த்து நிலை நிறுத்தினார். அது மிகப்பெரிய கதை. `Rags To Riches’ என்ற தன் சுயசரிதையில் என்னென்ன சிக்கல்களை, இன்னல்களையெல்லாம் அவர் எதிர்கொண்டார், எப்படி எம்ஜிஎம் என்கிற குரூப் ஆஃப் கம்பெனீஸை உருவாக்கினார் என்பதையெல்லாம் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.
முதலில் லாஜிஸ்டிக் பிசினஸ், பிறகு சர்வதேச அளவில் ஒரு தொழில்… நிலக்கரி இறக்குமதி. அதிலும் கொடிநாட்டியது எம்ஜிஎம். மெல்ல மது உற்பத்தித்துறையிலும் இந்த நிறுவனம் கால்பதித்தது. எம்ஜிஎம் பிராண்ட் மதுவகைகளுக்குத் தனி மார்க்கெட் உருவானது. அதேபோல எம்ஜிஎம்-மின் ரிசார்ட்டுகளும் தனி கவனம் பெற்றன. முத்தாய்ப்பாக எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு (MGM Dizzee World) பல நடுத்தரக் குடும்பத்தினருக்கு உற்சாகப் பொழுதுபோக்குத்தலம். இவை மட்டுமல்ல… மலேசியாவைச் சேர்ந்த பிரபல மேரி பிரவுன் (Marry Brown) ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனத்தின் ஃபிரான்சைஸை வாங்கி, தென் தமிழகமெங்கும் பரவவிட்டது எம்ஜிஎம்.
சில நேரங்களில், சில விஷயங்களை எப்பேர்ப்பட்ட பெரிய மனிதர்கள் சொன்னாலும், நம்மால் நம்ப முடியாமல் போகலாம். ஆனால், சிலரின் வாழ்க்கையும், அவர்களின் அனுபவங்களும், பெற்ற வெற்றியும் நம்மைப் பொட்டில் அறைந்தாற்போல, `இது உண்மைப்பா’ என்று உணரவைத்துவிடும்.
உழைப்பால், கடின உழைப்பால் ஒருவர் முன்னேற முடியுமா… `முடியும்’ என்று அடித்துச் சொல்கிறது எம்.ஜி.முத்து அவர்களின் வாழ்க்கை!