ஹூஸ்டன்: அமெரிக்காவில், காரில் ரகசிய இடம் அமைத்து 24 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய பிரபல ‘பாப்’ பாடகியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகி ரக்குவெல் டொலொ ரஸ் அன்டியோலா, 34. சமூக வலைதளங்களில் பாப் பாடல்களை பாடி பிரபலமான இவர், அவ்வப்போது ‘வீடியோ’க்களை பதிவிட்டு வருகிறார். சமூக வலைதளத்தில் இவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இதேபோல், மாடல் அழகியாக உள்ள மெலிசா டுபோர், 30, டிசைனிங் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் சமூக வலைதளத்தில் சிறுமிகள், பெண்கள் உட்பட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஹூஸ்டன் நகரில் நடந்த விருந்து ஒன்றில் பங்கேற்ற இருவரும், விலை உயர்ந்த சொகுசு காரில், அலபாமா நகருக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். அப்போது அன்டியோலாவும், டுபோரும் உச்சக்கட்ட மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வழியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், இவர்களின் காரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது, காரின் பின்புற பகுதியில் பலகை வாயிலாக ரகசிய அறை அமைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்த போலீசார், அங்கிருந்து பண்டல் பண்டலாக ‘கொகைன்’ எனப்படும் போதைப் பொருளை கைப்பற்றினர். இதன் மொத்த மதிப்பு 24.73 கோடி ரூபாய் ஆகும். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பிரபலமான இரு பெண்கள், அதை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement