குருஷேத்ரா: சூரியகாந்தி விதைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக் கோரி புதுடில்லி – சண்டிகர் நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு சூரியகாந்தி விதையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் குவின்டாலுக்கு 6400 ரூபாயில் மாநில அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6ம் தேதி ஹரியாவின் குருஷேத்ரா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்தும் சூரியகாந்தி விதைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க வலியுறுத்தியும் குருஷேத்ராவில் விவசாயிகள் நேற்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் புதுடில்லி – சண்டிகர் நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
‘எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் தொடரும்’ என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்ற பாரதிய கிஷான் விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில் ”கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
நேற்று நடந்த போராட்டத்துக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நேரில் ஆதரவு தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement