அமெரிக்காவில் லாரியில் பயணம் செய்த ராகுல்: வீடியோ வெளியிட்டது, காங்கிரஸ்

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த மாதம் 22-ந் தேதி இரவு தலைநகர் டெல்லியில் இருந்து சண்டிகாருக்கு லாரியில் பயணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நாட்டில் உள்ள லாரி டிரைவர்கள் அன்றாடம் சந்தித்து வருகிற பிரச்சினைகள் பற்றி கேட்டறிவதற்காக அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சி கூறியது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாயின.

அமெரிக்காவிலும் லாரி பயணம்

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கும் லாரியில் பயணம் செய்த தகவல் வெளியாகி உள்ளது.

அவர் அந்த நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் இருந்து நியூயார்க் நகரத்துக்கு 190 கி.மீ. தொலைவுக்கு லாரியில் இந்திய வம்சாவளி டிரைவர்களுடன் பயணம் செய்தார் என்ற தகவல் நேற்று வெளியானது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சி நேற்று கூறுகையில், ” டெல்லியில் இருந்து சண்டிகருக்கு ராகுல் காந்தி லாரி பயணம் மேற்கொண்டதுபோலவே, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி லாரி டிரைவர்களின் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்டு அவர்களுடன் லாரி பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின்போது அவர்கள் நடத்தியது இதயம் தொட்டுப்பேசுகிற உரையாடலாக அமைந்தது” என தெரிவித்துள்ளது.

கண்ணியமான ஊதியம்

மேலும், “இங்கே கடுமையான விலைவாசி உயர்வுக்கு மத்தியில் குறைந்த ஊதியத்துடன் லாரி டிரைவர்கள் வாழ்க்கை போராட்டமாக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் லாரி டிரைவர்கள் தங்களது பணிக்கேற்ப கண்ணியமான கூலிகளைப் பெறுகிறார்கள்” எனவும் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.

அமெரிக்காவில் லாரி டிரைவருடன் ராகுல் நடத்திய பயணம் பற்றிய 9 நிமிட வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.