சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி முறையீடு செய்தார். மனுத்தாக்கல் நடைமுறைகள் நிறைவுற்றால் இன்று பிற்பகலிலேயே இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
கரூர் மற்றும் சென்னையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய போலீஸ் பாதுகாப்புப் படை உதவியுடன் நடைபெற்றது. 10 இடங்களில் நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரபூர்வமாக எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியானது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 6வது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அதிகாரபூர்வமாக தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி முறையீடு செய்தார்.
அப்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், கைதுக்கு முன்பான விசாரணை என்ற நடைமுறையை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் முறையிடும்படி அறிவுறுத்தினர். மேலும், மனுத்தாக்கல் நடைமுறைகள் நிறைவுற்றால் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.