நொய்டா: பிஹார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கருதி கடந்த நான்கு மாத காலமாக அவரது குடும்பத்தினர் துயரத்தில் இருந்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் நொய்டாவில் செக்டார் 50-ல் அவர் உயிருடன் இருப்பதை அவரது உறவினர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். அந்த நபர் மோமோஸ் கடையில் அப்போது இருந்துள்ளார்.
அந்த நபரின் பெயர் நிஷாந்த் குமார் என தெரிகிறது. கடந்த ஜனவரி 31-ம் தேதி அவரை காணவில்லை என அவரது தந்தை சச்சிதானந்த் சிங், சுல்தாங்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நிஷாந்தின் மாமனார் நவீன் சிங் மற்றும் மைத்துனர் ரவி சங்கர் சிங் மீது சச்சிதானந்த், குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். தன் மகனை கடத்தி, கொலை செய்துவிட்டதாக சச்சிதானந்த் தெரிவித்திருந்தார். இது ரவியின் குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது.
இந்தச் சூழலில் ரவி, நொய்டாவில் செக்டார் 50 பகுதியில் அமைந்துள்ள ஒரு மோமோஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அழுக்கான ஆடை அணிந்திருந்த யாசகர் ஒருவரை, அந்தக் கடைக்காரர் திட்டி, துரத்தி உள்ளார். அதனை கவனித்த ரவி, மனிதாபிமான அடிப்படையில் அந்த நபருக்கு மோமோஸ் வழங்குமாறு கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு தான் அந்த நபர், காணாமல் போன நிஷாந்த் என்பதை ரவி அறிந்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து, நிஷாந்தை அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, நடந்ததை விவரித்துள்ளார். பின்னர் அவர் பிஹார் மாநில காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் எப்படி டெல்லி வரை வந்தார் என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தனக்கும், தனது குடும்பத்திற்கும் நீதி கிடைத்திருப்பதாக ரவி தெரிவித்துள்ளார்.