இவர்களுக்கு ஓய்வு தான் கரெக்ட்… சீனியர் வீரர்களை கழட்டிவிட சொல்லும் ஹர்பஜன்!

IND vs WI, India Squad Prediction: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்த பின், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள், இரண்டு டி20 போட்டிகளை இந்தியா விளையாட உள்ளது. 

ஜூலை 12 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் விளையாடும் அணிகளை பிசிசிஐ இதுவரை அறிவிக்காத நிலையில், இதுகுறித்த பேச்சுகள் தற்போது அதிகமாகியுள்ளன, பரிந்துரைகளும் பெருகிவிட்டன.

யார் யாருக்கு வாய்ப்பு?

முதலில் டெஸ்ட் தொடரை  விளையாட உள்ளதால், அதில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது முதல் கேள்வியாக உள்ளது. WTC இறுதிப்போட்டி தோல்விக்கு பின் யார் யாருக்கு இந்த தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புஜாரா, ரஹானே, கேஎஸ் பரத் ஆகியோருக்கு பதில் வேறு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்த சூழலில், இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஒரு புதிய அணுகுமுறையை பிசிசிஐ கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். பல மூத்த வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பாக டி20 தொடரில் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

6 புதுமுகங்கள்!

“மூத்த வீரர்கள் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியுள்ளனர். எனவே, அவர்கள் ஓய்வெடுக்க வேண்டும். இதை மேலும் தாமதிக்காமல் இளம் அணியை மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்புமாறு நான் பிசிசிஐ தேர்வர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். டி20 தொடரை பொறுத்தவரை, ஹர்திக் பாண்டியா சுற்றுப்பயணத்திற்கு கேப்டனாக இருக்க வேண்டும். எதிர்காலத்திற்கு ஒரு அணியை உருவாக்கக்கூடிய ஒரு அணியை தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று ஹர்பஜன் தனது யூ-ட்யூப் சேனலில் கூறினார்.

ஹர்பஜன் சிங், மே.இ. தீவுகளுக்கு உடனான டி20 தொடருக்கான தனது 15 பேர் கொண்ட இந்திய அணியையும் தேர்ந்தெடுத்தார். அதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகிய ஆறு புதிய முகங்களை உள்ளடக்கியிருந்தார். இவர்கள் அனைவரும் கடந்த ஐபிஎல் சீசனில் நல்ல ஆட்டத்திறனை வெளிப்படுத்தியிருந்தனர்.

“சுப்மான் கில் நிச்சயமாக தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக இருப்பார். அவர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மற்ற தொடக்க ஆட்டக்காரராக முயற்சிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் நம்பமுடியாத அளவிற்கு ஐபிஎல் தொடரில் நல்ல திறனை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்த இடமெல்லாம் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் மிகப்பெரிய போட்டிகளுக்கும் தயாராக இருப்பதாக நான் உணர்கிறேன். ருதுராஜ் கெய்க்வாட் எனது மூன்றாவது தொடக்க வீரராக இருப்பார். நான் அக்சர் படேலை ஆல்-ரவுண்டராக எடுத்துக்கொள்வேன். ஆகாஷ் மத்வாலும் சிறந்த தேர்வாக இருப்பார்.  அவரும் அணியில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.

ஹர்பஜன் சிங்கின் 15 பேர் கொண்ட இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, திலக் வர்மா, ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் மத்வால், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.