ஓமந்தூரார் மருத்துவர்களை அமலாக்கத்துறை நம்பவில்லையா? எய்ம்ஸ் மருத்துவர்களை அழைக்க திட்டம்?

அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க ஒன்றிய அரசின் கீழ் வரும் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களை அழைத்து வர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

செந்தில் பாலாஜியின் மருத்துவ அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது

இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்பம் என்றும் கூறுகிறார்கள்.

சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் சென்னை பெரம்பூர் ரயில்வே மருத்துவர்களை அழைத்து வந்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து பரிசோதிக்கவும் திட்டம் தீட்டப்படுவதாகவும் கூறுகிறார்கள். அந்த மருத்துவர்கள் பரிசோதித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று கூறினால் அவரை உடனடியாக டெல்லி அழைத்து செல்ல அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு வருவதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.