கோவையில் நீருக்கடியில் செல்லும் ட்ரோன் தயாரிப்பு

கோவை: தேசிய அளவில் கோவைக்கு பெருமை சேர்க்கும் வகையில் கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் அடல் இன்குபேஷன் மையத்தில், கடற்படையினர் தண்ணீருக்கு அடியில் பயன்படுத்தும் ட்ரோன், ராணுவ பீரங்கி டாங்க் வாகனங்களுக்கான எல்இடி விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்காக ‘கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையம்’ செயல்பட்டு வருகிறது.

அதிநவீன மற்றும் புதுமையான பொருட்கள் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, ராணுவ தளவாடங்களுக்கு தேவையான பல புதிய பொருட்கள் வடிவமைப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த மையம் செயல்படுகிறது. இங்கு, இந்தியாவிலேயே முதல் முறையாக அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்படும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக கொடிசியா டிபென்ஸ் இன்னோவேஷன், அடல் இன்குபேஷன் மையத்தின் இயக்குநர்கள் சுந்தரம், ராமமூர்த்தி ஆகியோர் கூறியதாவது: தொழில்முனைவோரை மேம்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் முதல்கட்டமாக அதிநவீன மற்றும் புதுமையான பொருட்கள் தயாரிக்கும் யோசனைகளைக் கொண்டுள்ள 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர், யோசனை கட்டம், பொருட்கள் மேம்பாடு இறுதி வடிவம் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். இங்கு, ராணுவத்துக்கு மட்டுமின்றி, பல்வேறு பொருட்கள் தயாரிப்பையும் ஊக்குவித்து வருகிறோம். இருப்பினும் எதிர்காலத்தில் ராணுவத்துக்கு பயன்படும் வகையில் பொருட்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில்முனைவோரை தேர்ந்தெடுத்து வருகிறோம்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தொழில்முனைவோருக்கு அலுவலகம், பரிசோதனைக்கு கருவிகளை பயன்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்து தரப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம் உள்ளிட்டவை எதிர்காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க உள்ளன. இதனால் அத்துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

தற்போது இந்தியாவிலேயே முதல் முறையாக கடற்படையில் பயன்படுத்துவதற்கான நீர்மூழ்கி ட்ரோன், ராணுவ டாங்க் வாகனங்களில் பயன்படுத்தப்படும் முகப்பு விளக்குகளை எல்இடி தொழில்நுட்பத்துக்கு மாற்றுவது என்பன உள்ளிட்ட 30 பொருட்கள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் நிறைவடைந்த பின் அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தொழில் முனைவோர் கொண்டுள்ள தனித்திறன்களை வெளிப்படுத்த இந்த மையம் தொடர்ந்து உதவும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ராணுவ டாங்குகளுக்கான ‘எல்இடி’ பல்ப் தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ள கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பொறியாளர் நாகராஜ் கூறியதாவது: இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ‘பிஎம்பி’ என்ற ரகத்தை சேர்ந்த ராணுவ டாங்குகளின் முகப்பு விளக்குகளைப் பொருத்தவரை, இன்கேன்சியன்ட் என்று சொல்லக்கூடிய பழைய மாடல் விளக்குகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை எல்இடி விளக்குகளாக மாற்றும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

சாதாரண எல்இடி விளக்குகள் தயாரிப்பு போன்று இப்பணி எளிதானது அல்ல. பாதுகாப்பு, ஆற்றல் சேமிப்பு, நீடித்து உழைக்கும் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு வடிவமைக்க வேண்டும். எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் சிறப்பாக பொருளை தயாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வழக்கமாக வானில் பறந்தபடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்தல், கண்காணிப்பு பணி மேற்கொள்ளுதல், விளைநிலங்களில் உரம், பூச்சிக் கொல்லி தெளித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரூவை சேர்ந்த தனியார் நிறுவனம் கோவை கொடிசியா வளாகத்தில் அமைத்துள்ள மையத்தில் தண்ணீருக்கு அடியில் பயன்படுத்த உதவும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இதர வசதிகளை கொண்ட ட்ரோனை வடிவமைத்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.