சிபிஐக்கான அனுமதி ரத்து.. அதிரடியில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. இதுதான் காரணமா?

சென்னை:
மத்திய புலனாய்வுத் துறைக்கு (CBI) வழங்கப்பட்டிருந்த அனுமதியை தமிழக அரசு அதிரடியாக இன்று திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் யாரிடமாவது சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமானால் அதற்கு அரசிடம் முன் அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாகி உள்ளது.

டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் படி, சிபிஐ அதிகாரிகள் ஒருவரிடம் விசாரிக்க விரும்பினால் அதற்கு முன்பாக அந்த நபர் சார்ந்த மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. மத்திய அரசு – மாநில அரசுகள் இடையேயான இணக்கத்தின் காரணமாக பல்வேறு காலக்கட்டங்களில் இந்த விதிமுறையை மாநில அரசுகள் தளர்த்தி வந்தன.

இதுபோன்ற மாநிலங்களில் சிபிஐ எப்போது வேண்டுமானாலும் யாரிடமும் விசாரணை நடத்தி கைது செய்யலாம்.

இதனிடையே, மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக, தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பழிவாங்கும் விதமாக சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், தெலங்கானா, மிசோராம் போன்ற பல மாநிலங்கள் சிபிஐக்கு கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றன. இந்த மாநிலங்களில் அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐயால் யாரிடமும் தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் வரிசையில் தற்போது தமிழ்நாடும் இணைந்துள்ளது. சிபிஐக்கு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்வதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. எனவே, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இனி சிபிஐயால் இங்கு யாரிடமும் விசாரணை நடத்த இயலாது.

இது ஒருபுறம் இருக்க, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததன் எதிரொலியாகவே இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக, அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால் அவர் மீது சிபிஐயும் வழக்கு பதிவு செய்துவிடும். இதனை தடுப்பதற்காகவே தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.