செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் 'நோ'.. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சொன்ன காரணங்கள் என்ன?

சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை எதிர்த்து அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஏன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்பதற்கு அமலாக்கத்துறை சார்பில் பல காரணங்கள் அடுக்கப்பட்டன.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று நள்ளிரவு கைது செய்தனர். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறியதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

நீதிமன்றக் காவல்:
இது ஒருபுறம் இருந்த போதிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியான அல்லி, ஓமந்தூரார் மருத்துவமனைக்கே சிறிது நேரத்திற்கு முன்பு நேரில் வந்தார். இதையடுத்து, செந்தில் பாலாஜி உள்ள அறையிலேயே அவரது தரப்பு வழக்கறிஞர்களும், அமலாக்கத்துறை வழக்கறிஞர்களும் வாதம் வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, வரும் 28-ம் தேதி செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மனித உரிமை மீறல்:
இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இளங்கோவன் வாதிடுகையில், “அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக நள்ளிரவில் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை குறித்து அவரது மனைவி, உறவினர்களிடம் தெரிவிக்கப்படவில்லை. கைது செய்வதற்கு முன் நோட்டீஸ் வழங்கப்படவில்லை. இது மனித உரிமை மீறல். எனவே அவரது ரிமாண்டை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

அமலாக்கத்துறை வாதம்:
இதையடுத்து, அமலாக்கத்துறை முன்வைத்த வாதத்தில், “அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அவரை கைது செய்வதற்கான மெமோ அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மெமோவை வேண்டுமென்றே செந்தில் பாலாஜி வாங்க மறுத்தார். அவரை கைது செய்யும் போது அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. கைது நடவடிக்கை குறித்து செந்தில் பாலாஜி சகோதரருக்கும், அவரது மனைவிக்கும் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது.

நேற்று வரை நன்றாக இருந்தார்:
நீதிபதி பிறப்பித்த ரிமாண்ட் உத்தரவு சரியானது. அதை நிராகரிக்க அவர் கோர முடியாது. இடைக்கால ஜாமீன் வழங்க சட்டத்தில் இடமில்லை. நேற்று வரை நன்றாக இருந்தவர் திடீரென இன்று உடல்நலம் சரியில்லை எனக் கூறுகிறார். அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அதற்கு அவசியம் இல்லை. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை சுதந்திரமான மருத்துவக் குழு கண்காணிக்க வேண்டும்” என அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.