அமலாக்கத்துறை நேற்று செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அவர் நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதய ரத்த நாளங்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் இதனால் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் வந்து செந்தில் பாலாஜியிடம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து அவரை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
செந்தில் பாலாஜிக்கு
அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை என பசையுள்ள துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனால் அப்போதே திமுக சீனியர்கள் மத்தியில் அதிருப்தி அலை உருவாகியது. ஆனாலும் துடிப்புடன் செயல்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் பெரியளவில் வெற்றியை பெற்றுத் தந்தார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமானது. தனக்கு முதலமைச்சர் கொடுத்த முக்கியத்துவத்துவத்துக்கும் அங்கீகாரத்துக்கும் நியாயம் சேர்க்கும் வகையில் தேர்தல் வெற்றிகளை திமுகவுக்கு பெற்றுக் கொடுத்தார்.
ஆனால் தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி அழுத்தங்கள் வருகின்றன.
இது குறித்து இன்று காலை முதலே முதல்வர் ஸ்டாலின் திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஆலோசித்து வந்தார்.
தற்போது அவர் வசம் உள்ள துறைகளை சீனியர் அமைச்சர்கள் ஓரிருவரிடம் பிரித்துக் கொடுக்க திட்டமிட்டுவருவதாக சொல்கிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.