செந்தில் பாலாஜி பதவி விலகியே ஆகணும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அமலாக்கத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேசியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,”மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பணம் பெற்றது தொடர்பாக ஏற்கனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு காரணமான வழக்கு தற்போது பதிவு செய்ததல்ல. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்படவில்லை. 2 ஆண்டுகளாக முறைகேடாக பார்கள் செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு வருகின்ற வருவாய் திமுகவினர் மூலமாக மேலிடத்திற்கு சென்று கொண்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில் முறைகேடாக பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்துள்ளனர். இப்படி பல கோடி ரூபாய் முதல்வரின் குடும்பத்துக்குச் சென்றதாக பத்திரிகை செய்திகள், வெளி வட்டார செய்திகள் வந்து கொண்டுள்ளன.

செந்தில்பாலாஜி உத்தமர் போல முதல்வர் பேசுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஆதாரம் இருந்ததால்தான் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியை செந்தில்பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மிக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.