“தமிழக மாணவர் முதலிடம் பிடித்ததாலே நீட்டை நியாயப்படுத்த முடியாது!’’ – ராமதாஸ்

சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து இந்திய அளவில் 99.99 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் இத்தேர்வில் முதல் 10 இடங்களைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வர் பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் 10-ம் வகுப்பு வரை செஞ்சியில் உள்ள தனியார் பள்ளியிலும், மேல்நிலை படிப்பைச் சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் படித்திருக்கிறார். 

இன்னொரு பக்கம், கிராமப்புற மற்றும் ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் சிதைக்கிறது என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. நீட் தேர்வு நடைமுறைக்கு எதிர்ப்புகள் இன்றுவரை உள்ளபோதும், அதனை நிறுத்த முடியவில்லை. 

பிரபஞ்சன்

என்னதான் சவாலான தேர்வுகள் வந்தாலும், அதிலும் வெற்றிபெற விரைவிலேயே தமிழக மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்ற சமாதானங்களும் சொல்லப்பட்டன.

நீட் தேர்வில்  தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி கோச்சிங் வகுப்புகளுக்குச் சென்றவர்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர் கல்வி செயற்பாட்டாளர்கள்.

எனவே, கோச்சிங்க்கு பணம் இல்லாத, வழி அறியாத கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு இந்தத் தகுதித் தேர்வில் உள்ள பாரபட்ச நடைமுறைகளை களைவதற்கான வழிகளும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் நீட் கோச்சிங், தனியார் தன்னார்வல அமைப்பினர் பலர் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நீட் கோச்சிங் என, அந்தச் செயல்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

நீட் தேர்வு

இந்நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், நீட் தேர்வின் நடைமுறையை சாடி ட்வீட் செய்துள்ளார். “2023-ம் ஆண்டிற்கான நீட் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண் பெற்று  தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்  என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முதலிடம் பிடித்திருக்கிறார்கள் என்பதாலேயே அத்தேர்வை நியாயப்படுத்த முடியாது. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் அளவுக்கு வாய்ப்பும், வசதிகளும் உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம். 

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு எப்போது விளக்கு கிடைக்கிறதோ, அப்போதே ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சாத்தியமாகும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.