கன்னியாகுமரி:
நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்த நாகர்கோயிலை சேர்ந்த காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவன் காசி (26). இத்தனை வயது ஆகியும் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே முழு நேரமாக வைத்திருந்தவன். அப்பா, அம்மா சம்பாதித்த பணத்தில் ஜாலியாக இருந்த காசி, சினிமாக்களில் வரும் ப்ளே பாய் போல வாழ்க்கையை நடத்தி வந்தான்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அழகான இளம்பெண்களிடம் நைசாக பேசி தனது காதல் வலையில் விழ வைப்பான் காசி. அவ்வாறு காதலில் விழுந்த பெண்களை தனியாக வர சொல்லி அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளான். அப்படி உல்லாசமாக இருப்பதை அந்த பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து, அதை வைத்து அந்த பெண்களை மிரட்டி மீண்டும் தனது காம இச்சைக்கு பயன்படுத்துவான்.
அதற்கு இணங்காத பெண்களிடம், ஆபாச வீடியோவை உனது வீட்டில் உள்ளவர்களிடம் காட்டிவிடுவேன் எனக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறித்து வந்திருக்கிறான் காசி. இதனிடையே, காசியால் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலாக இதுகுறித்து புகார் அளிக்க, கோழிக்குஞ்சை அமுக்குவது போல கன்னியாகுமரி போலீஸார் 2020-ம் ஆண்டு காசியை அமுக்கினர்.
அவனிடம் நடத்திய விசாரணையில், 120-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுபோல உல்லாசம் அனுபவித்து அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவ்வாறு அவனிடம் இருந்த 2000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை போலீஸார் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் காசி சிறையில் அடைக்கப்பட்டான்.
இத்தனை நடந்த பிறகும் கூட காசியின் சேட்டை அடங்கவில்லை. கோர்ட்டில் அவனை ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்த போது கைவிலங்குடன் இருந்த காசி, ஹார்ட்டின் ஷேப்பில் கை வைத்து போஸ் கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தான். அதன் பிறகு, போலீஸாரின் அன்பான கவனிப்பால் அடுத்தடுத்து நீதிமன்றத்திற்கு வந்த போது பவ்யமாக காசி வந்து சென்றது வேறு கதை. ஆனால், அவனது காம சேட்டைகளை அறிந்து நீதிமன்றமே அதிர்ச்சியாகி அவனுக்கு 4 முறை ஜாமீன் அளிக்க மறுத்தது தான் இந்த வழக்கின் ஹைலைட்டே.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, பல பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியும், பணம் பறித்தும் வந்த காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.