அகமதாபாத்: அரபிக்கடலில் உருவாகியுள்ள பிப்பர்ஜாய் புயல், நாளை கரையை கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், குஜராத்தில் 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பிப்பர்ஜாய் புயல், குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் நாளை (ஜூன் 15) பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: புயல் கரையை கடக்கும்போது குஜராத் மாநிலத்தின் கட்ச், சவுராஷ்டிரா, தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜுனாகர், மோர்பி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் புயல் காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் வசித்து வந்த 20,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
அரபிக்கடலில் உருவாகியுள்ள பிப்பர்ஜாய் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டு அனைவரும் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
தயார் நிலையில் மீட்பு வீரர்கள்: மேலும், மத்திய அரசு, மாநில அரசு, இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பிப்பர்ஜாய் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன.
அதிக சேதம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படும் இடங்களில் இருந்து கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்படும் குஜராத் பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேச பேரிடர் நிர்வாக அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன், பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
ரயில் சேவைகள் ரத்து: சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், தேசிய, பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 12 குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. புயலின் காரணமாக குஜராத், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, லட்சத்தீவுகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட மேற்கு ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்கள் பல ரயில்களை ரத்து செய்துள்ளன.