சென்னை: “சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி ஆகியனபாஜகவின் கிளை அமைப்புகளைப் போலவே கடந்த பல ஆண்டு காலமாகவே செயல்பட்டு வருகிறது. அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது நிகழ்வு மிகப் பெரிய உதாரணம்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையை அனுப்பி மிரட்டுவதைப் போல் தமிழகத்திலும் முயற்சித்திருக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, ஐ.டி ஆகியன பாஜகவின் கிளை அமைப்புகளைப் போலவே கடந்த பல ஆண்டு காலமாகவே செயல்பட்டு வருகிறது. அதற்கு இந்த நிகழ்வு மிகப் பெரிய உதாரணம்.
நேற்று அதிகாலை தொடங்கி, நள்ளிரவைத் தாண்டியும், அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒரே இடத்தில் அமரவைத்து விசாரணை என்ற பெயரில் அமலாக்கத் துறை துன்புறுத்தியுள்ளது. அவர் உடல்நிலை பாதிக்கும் அளவுக்கு மனிதாபிமானம் இல்லாமல், அமலாக்கத் துறை அதிகாரிகள், தங்கள் எஜமானர்களான மோடி, அமித் ஷாவை திருப்திபடுத்தும் கேடுகெட்ட செயலை செய்திருக்கிறார்கள்.
இந்த நடவடிக்கையின் மூலம் திமுகவை மட்டுமல்ல, அமலாக்கத் துறை போன்ற பல அமைப்புகள் அதிமுகவையும் மிரட்ட பாஜக பயன்படுத்தி வருகிறது. கூட்டணியை பரிசீலனை செய்வோம் என்று அதிமுக சொன்னதற்கு, உன்னையும் கைது செய்வோம் என்று மிரட்டியிருக்கிறது பாஜக. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத இயக்கம் திமுக. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் ரெய்டு வந்தபோதும் திமுகதான் எதிர்த்து குரல் கொடுத்தது.
திமுகவை ஊழல் நிறைந்த இயக்கமாக காட்டுவதற்கு, காலங்காலமாக முயற்சித்து ஒவ்வொருவரும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நடவடிக்கையும் தோற்றுப்போகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழக முதல்வரை குறிவைத்து அவரது உறவினர்கள் இல்லங்களில் எல்லாம் சோதனை நடத்தியது பாஜக. அந்த முயற்சி என்ன ஆனது என்பதை ஊடகவியலாளர்கள் அறிவர். திமுக மீதும், திமுக தலைவர்கள் மீதும் எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் திண்டாடும் பாஜக, மக்கள் மத்தியில் பரப்பும் பொய் பிரச்சாரத்துக்கு புலனாய்வு அமைப்புகளை ஏவி சோதனை நடத்துவதைத் தொடர்ந்து செய்து வருகிறது. திமுக ஊழல் நிறைந்த கட்சி என்பதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்று பாஜக, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை வெற்றிகரமான கட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். வரும் 23-ம் தேதிகூட, பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அவருடன் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக தலைவர்களும் ஆலோசனை நடத்தி வியூகம் வகுக்க உள்ளனர். இதனால், அபரிமிதமான பதற்றத்தில் தவிக்கும் பாஜக, அமலாக்கத் துறை மூலம் நேரடியாக மிரட்டும் வேலையை செய்கிறது. ஒரு தனிநபரின் அரசியல் பகையும், ஒரு கட்சியின் சித்தாந்த ரீதியிலான அரசியல் பகையும் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பழிவாங்கும் உச்சமாக மாறியிருக்கிறது.
கொங்கு மண்டலத்திலாவது சற்று வாக்குகளை வாங்க முடியும் என்று பாஜக நம்பிக்கொண்டிருந்தது. அந்த நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்தவர் செந்தில்பாலாஜி. சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜகவில் யார் நின்றாலும் தமிழக மக்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள் என்ற சூழல் இருக்கும்போது, தனது தோல்விக்கு காரணம் செந்தில்பாலாஜி என நினைத்து அவரை பழிவாங்கும் எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலையின் அரசியல் தில்லுமுல்லுகளை இஞ்ச் இஞ்சாக விமர்சித்து அம்பலப்படுத்தி வருகிறார் செந்தில்பாலாஜி. மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் பாஜகவின் தோல்விக்கு காரணகர்த்தாவாக களத்தில் பணியாற்றிய செந்தில்பாலாஜி மீது பழிவாங்கும் வேட்கை பாஜகவுக்கு அதிகமாகியிருக்கிறது” என்று அவர் கூறினார்.
இதனிடையே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்: செந்தில்பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு