புதுடெல்லி: ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழா மூலம் 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். 6-வது ரோஜ்கர் மேளாவில் 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
எஸ்எஸ்சி, யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி தேர்வுகள் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். இந்த போட்டித் தேர்வுகள் வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. கடந்த காலங்களில் ஒருவர் அரசு பணியில் சேர ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகும், யாராவது நீதிமன்றத்துக்கு சென்றால் அரசு பணியில் சேர 5 ஆண்டுகள் வரை காலதாமதம் ஏற்படும்.பாஜக ஆட்சியில் அரசு வேலைவாய்ப்பை பெற்ற இளைஞர்கள் சில மாதங்களிலேயே பணியில் இணைகின்றனர்.
குடும்ப அரசியல் கட்சிகளின்ஆட்சியில் அரசு வேலைவாய்ப்புகள் அந்த கட்சி தலைவர்களின்சொந்த பந்தம், நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. அரசு வேலைவாய்ப்புகளில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது. இதன்மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு குடும்ப அரசியல் கட்சிகள் துரோகம் இழைத்தன. கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு அரசு வேலைவாய்ப்புகளில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டது. குரூப் சி , டி பணிகளில் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மம்தா, லாலு குறித்து விமர்சனம்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் பெயர்களைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது: ஊடகங்களில் அண்மையில் வெளியான செய்திகளில் ஒரு மாநிலம் (மேற்குவங்கம்) குறித்து விவாதிக்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் துப்புரவுப் பணி வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வழங்க வேண்டும். ஓட்டுநர், எழுத்தர், ஆசிரியர், செவிலியர் என ஒவ்வொரு அரசு பணிக்கும் லஞ்ச தொகை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மற்றொரு வழக்கும் (லாலு பிரசாத் வழக்கு) ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வந்தது. முன்னாள் ரயில்வே அமைச்சர் ஒருவர் ஏழை விவசாயிகளுக்கு ரயில்வே துறையில் வேலை தருவதாகக் கூறி அவர்களிடம் இருந்து நிலங்களை லஞ்சமாக பெற்றிருக்கிறார். குடும்ப அரசியல் கட்சிகள், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்றன. இதற்கு நேர்மாறாக இளைஞர்களின் பாதுகாவலனாக பாஜக அரசு செயல்படுகிறது.
பாஜக அரசு தாய்மொழிக்கு முன்னுரிமை அளித்து வரு கிறது. குறிப்பாக போட்டித்தேர்வு, நுழைவுத் தேர்வுகள் தாய்மொழியில் நடத்தப்படுகின்றன. இவ்வாறு மோடி பேசினார்.