ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோந்தம் தேஜஸ்வினி என்பவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கொல்லப்பட்டார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோந்தம் தேஜஸ்வினி என்பவர் பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டன் சென்றுள்ளார். 27 வயதாகும் இவர், லண்டனில் வெம்ப்லே என்ற பகுதியில் நீல்ட் கிரசெண்ட் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர், கோந்தம் தேஜஸ்வினியையும், மற்றொரு பெண்ணையும் கத்தியால் குத்தி உள்ளார். இதில், தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்திக் குத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவரையும் லண்டன் மெட்ரோபாலிடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
கத்தியால் குத்திய நபரின் பெயர் கெவன் ஆன்டோனியோ லாரன்கோ டி மொரைஸ் என்பதும், கடந்த வாரம்தான் இந்த குடியிருப்புக்கு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கத்தியால் குத்திய இந்த நபர் தப்பி ஒடிய நிலையில், வடக்கு லண்டன் காவல்நிலைய போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தேஜஸ்வினி கொலை செய்யப்பட்டது குறித்து ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.