வாஷிங்டன்: விண்வெளியில் பூத்த பூவின் படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ பகிர்ந்துள்ளது. இது விண்வெளி வீரர்களுக்காக பரிசோதனை முயற்சியாக வளர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் தொடங்கி அந்தக் கோள்களில் நீர் உள்ளதா என்பது வரையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
அப்படி மனிதர்கள் பிற கிரங்களுக்கு செல்லும் போது அவர்களுக்கு உதவும் வகையில் சோதனை முயற்சியாக விண்வெளியில் தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு தகுந்த ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பது உறுதி செய்யப்படும் என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு பயணம் செல்லும்போது இது பெரிதும் உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
“சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி தோட்டத்தில் இந்த ஜின்னியா மலர் வளர்விக்கப்பட்டது. விஞ்ஞானிகள் 1970-களில் இருந்து விண்வெளியில் தாவர வளர்ப்பு சார்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த குறிப்பிட்ட பரிசோதனையை கடந்த 2015-ல் நாசா விண்வெளி வீரர் கேஜெல் லிண்ட்கிரென் இதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொடங்கினார்.
இது வெறும் காட்சிக்கானது அல்ல. விண்வெளியில் தாவரங்களின் வளர்ச்சி குறித்து புரிதல் கிடைக்கிறது. முக்கியமாக சந்திரன், செவ்வாய் உட்பட பல்வேறு கிரகங்களில் நீண்ட நாள் பயணத்திற்கு பெரிதும் உதவும்” எனவும் நாசா தெரிவித்துள்ளது.