புதுடில்லி: ஏர் இந்தியா விமானத்தில், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள், தோழியை விமானி அனுமதித்த புகாரில், அவரது ‘லைசென்ஸ்’ சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அது போன்ற சம்பவம் நடந்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், கடந்த வாரம், தலைநகர் புதுடில்லியில் இருந்து, ஜம்மு – காஷ்மீரின் லே பகுதிக்கு சென்றது.
அப்போது, காக்பிட்டுக்குள் தங்களது தோழியை விமானிகள் அனுமதித்துள்ளனர். இதைப் பார்த்த விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விமான போக்குவரத்து விதிகளின்படி, விமானிகளை தவிர வேறு யாருக்கும் விமானிகள் அறைக்குள் அனுமதி கிடையாது.
விமானம் தரையிறங்கியதும், இது குறித்து, ஏர் இந்தியா நிறுவனத்திடம் விமான ஊழியர்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து, விமானங்களை இயக்க சம்பந்தப்பட்ட விமானிகளுக்கு தடை விதித்து, ஏர் இந்தியா உத்தரவிட்டது. மேலும், இந்த புகார் குறித்து விசாரணை நடத்த, ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ‘இந்த விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதில், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தது.
கடந்த பிப்ரவரியில், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து புதுடில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், காக்பிட்டுக்குள் பெண் தோழியை அனுமதித்த புகாரில், சம்பந்தப்பட்ட விமானியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம், ஏர் இந்தியா விமானத்தில் நடந்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்